தற்போதைய செய்திகள்

குழந்தை தொழிலாளர், கொத்தடிமை முறையை ஒழிக்க முதலமைச்சர் நடவடிக்கை – அமைச்சர் நிலோபர்கபீல் தகவல்

வேலூர்

குழந்தை தொழிலாளர், கொத்தடிமை முறைகளை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமையேற்று உரையாற்றினார். செயல் துறையின் இயக்குநர் பிரேம் ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், சுகாதார இணை இயக்குனர் வினோத் குமார், தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர்கபீல், மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்ட விளம்பரப் பலகைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை வெளியிட்டனர். பின்னர் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணிகளில் ஈடுபடுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிலோபர்கபீல் பேசியதாவது:-

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய இளம்வயதில் வறுமையால் தான் பட்ட துன்பங்களை யாரும் படக்கூடாது என்ற வகையில் பள்ளிகளில் உலகம் போற்றும் உன்னத திட்டமான சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை எளிய குழந்தைகளின் பசிப்பிணியை போக்கினார். அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் ஆரோக்கியமான உணவு கிடைக்க வழிவகை செய்தார்.

புரட்சித்தலைவரின் வழியில் வந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1994-ம் ஆண்டு கட்டாய ஆரம்ப கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சிறப்பான திட்டங்களால் இன்று அனைத்து குழந்தைகளும் சிறப்பான கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயக் ஆரம்ப கல்வி திட்டத்தால் அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட்டது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சிறப்பான திட்டங்களால் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2000, வீட்டுமனை பட்டா, ரேஷன்கார்டு, மருத்துவ வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. கொத்தடிமைகள் என்று நிரூபிக்கப்பட்டால் ஆண் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம், பெண் மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் இரண்டு லட்சமும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 3 லட்ச ரூபாய் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர், கொத்தடிமை முறைகளை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குழந்தைத் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986 என்று இருந்த சட்டம் தற்போது குழந்தை வளரின பருவம் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் என்ற திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தக் கூடாது என்று இருந்ததை அதனுடன் தற்போது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தவித அபாயகரமான பணிகளில் ஈடுபடக்கூடாது. என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலம் 1098 என்ற ஹெல்ப் லைன் என்ற அவசர உதவி எண் அறிவித்துள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வு அனைத்தும் பொதுமக்களுக்கும் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டம் முழுவதும் விளம்பர பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தபடும்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர்கபீல் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஜி.சதாசிவம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஆர்.வி.குமார், நகர கழகஅவைத்தலைவர் சுபான், நகர கழக பொருளாளர் தன்ராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.