திருவண்ணாமலை

தென்பள்ளிப்பட்டு அகதிகள் முகாமில் 178 குடும்பங்களுக்கு நிவாரணம் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் 178 குடும்பங்களுக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அங்குள்ள 178குடும்பங்களுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இலக்கிய அணிசார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.நாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள், சர்க்கரை, கோதுமை, துணி சோப்பு, சமையல் எண்ணெய், உள்ளிட்ட மளிகை பொருட்கள், அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் விழாவில் பேசுகையில், தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதின் பேரில் பரவல் தடுக்கப்பட்டது. மேலும் முதல்வர் கேட்டுக்கொண்டது போல் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். முககவசம் இல்லாமல் வெளியில் செல்லாதீர். மாணவர்களின் நலன் கருதியும், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றும் 10ம்வகுப்பு பொதுத்தேர்வினை முதல்வர் ரத்து செய்துள்ளார். இதனை அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். கழக அரசு மக்களின் அரசாக செயல்படுகிறது மக்கள் தேவைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அரசாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நைனாக்கண்ணு, முன்னாள் தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், திருவண்ணாமலை முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பர்குணகுமார், முன்னாள் ஒன்றியகுழுத்தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி தலைவர்கள் வீரளுர் ஜான்பாஷா, கீழ்பாலூர் ஏழுமலை, வேலு, இளைஞரணி நிர்வாகிகள் சபரி, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.