கரூர்

முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டம் ஏழை மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பெருமிதம்

கரூர்,

“கவசாக்கி” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதுடைய சிறுவனை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளித்து குணப்படுத்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஏழை எளிய மக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்; “கவசாக்கி” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள, ஒன்றரை வயதுடைய சிறுவனுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவர்கள் வழங்கிய தீவிர சிகிச்சையின் பயனாக தற்போது அந்தச்சிறுவன் பூரண குணமடைந்துள்ளான்.

இதுகுறித்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை காந்திநகர் பகுதியில் இருந்து பழனிசாமி மற்றும் கலா ஆகியோரின் ஒன்றரை வயதுடைய மகன் ஹரீஷ் கடந்த 03.06.2020 அன்று இரவு சுமார் 12 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சிறுவனுக்கு இடைவிடாத காய்ச்சல் இருந்ததாகவும், சுமார் 6 நாட்களாக காய்ச்சல் இருந்ததால் சில தனியார் மருத்துவமனைகளில் காண்பித்தும் பலனளிக்காமல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தொடர் காய்ச்சலுடனும், உதடுகளில் வெடிப்புடனும், கைகால்களில் வீக்கத்துடனும் காணப்பட்ட அந்தச் சிறுவனுக்கு பரிசோதனை செய்ததில் ஈரல் பகுதியிலும் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுவனுக்கு சிகிச்சையளித்த குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார் “கவசாக்கி ” நோய்க்கான அறிகுறிகளாக இருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உடனடியாக குழந்தை நல இணைப்பேராசிரியர் கனிமொழி தலைமையில் செந்தில்குமார், வித்யாசங்கரி, சாந்தி, சசிரேகா, ராதிகா, மற்றும் இருதய நிபுணர் சுசில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு சிறுவனுக்கு, இரத்த பரிசோதனைகள் மற்றும் எக்கோ பரிசோதனைகள் எடுக்கப்பட்டு நோயின் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்தச்சிறுவனுக்கு கொரேனா தொற்று உள்ளதா என்பதும் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

கவசாக்கி நோய் என்பது, 1967ம் ஆண்டு ஜப்பானில் டோமிஷோ கவசாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய்க்கு அவரின் பெயரே சூட்டப்பட்டது. 1990-களில் இந்தியாவில முதன் முதலில் கண்டறியப்பட்டது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை மட்டும் இந்த நோய் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 நாட்கள் தொடர் காய்ச்சல், உதடுகளில் வெடிப்பு, விரல்களில் தோல் உரிதல், கைகால் வீக்கம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானோரின் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் உருவகும். இது தொற்றக்கூடிய நோய் அல்ல.

இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு, முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்நோய்க்கு உயிர்பாதுகாப்பு எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்கக்கூடிய ஐ.வி. இமினோ குளோபின் (IV IG) என்ற விலைஉயர்ந்த நோய் எதிர்ப்புசக்தி மருந்து திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு, குளுக்கோஸ் மூலமாக சுமார் 16 மணிநேரம் அந்தச் சிறுவனுக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக தற்போது ஹரிஷ் பூரண குணமடைந்துள்ளார் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுவனுக்கு சுமார் ரூ.60,000 மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு இது பெரும்தொகை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஏழை-எளிய அடித்தட்டு மக்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டமென்பது ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும். கவசாக்கி நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதுடைய சிறுவன் அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ளார் என்பது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களின் தொடர் சாதனைகளில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது.

இந்தச்சிறுவன் தொடர்ந்து ஆறு மாதங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். 6 வாரம் கழித்து ஒரு எக்கோ பரிசோதனையும், 6 மாதம் கழித்து ஒரு எக்கோ பரிசோதனையும் செய்யப்படும். பிறகு அவருக்கு வழங்கப்படும் மாத்திரையின் அளவு படிப்படியாக குறைக்கப்படும். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் பாதிப்பானது இருக்காது. இந்த சிறுவன் வசிக்கும் பகுதியில் வேறு எந்த குழந்தைக்கும் இந்த நோய் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சாதனைகளை நிறைவேற்றும் வகையில், கரூர் மாவட்டத்திற்கு உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் கூடிய அரசு மருத்துவக்கல்லூரியை வழங்கிய முதலமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும், எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் கனிமொழி, செந்தில்குமார், இருக்கை மருத்துவ அலுவலர் முருகராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.