தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார் முதலமைச்சர்

சேலம்

காவிரி டெல்டா பாசன பகுதிகளின் சாகுபடிக்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து விடுகிறார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு நல்லமழை பெய்தது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. அதன்பிறகும் அவ்வப்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைபெய்தது. இதனால், மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12–-ம்தேதி தண்ணீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 18–-ம்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அவர் நேரில் சென்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார். தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் தொடர்ந்து 50 நாட்களுக்கு தண்ணீர் விட முடியும். ஏற்கனவே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. ஆகவே, இனிவரும் நாட்களில் கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பும். ஆற்றிலும் மழைநீர் வரத்தொடங்கும்.

பொதுவாகவே மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12–-ம்தேதி தண்ணீரை திறந்து விடுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக அரசு தேவையான தண்ணீரை திறந்து விடாததால் தாமதம் ஏற்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உரிய நாளில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்வதற்கு வசதியாக காவிரி டெல்டா மாவட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ரூ.6,724.75 கோடி மதிப்பில் 3,457.15 கி.மீ. தொலைவுக்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.