விற்பனையில் உச்சத்தை தொட்ட ஆவின்
சென்னை
ஆவின் நிறுவனம் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு
40 ஆண்டு
கடந்த நாற்பது ஆண்டுகளாக “”””ஆவின்”” எனும் வணிக பெயர் தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 23.51 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் வருமானம்
இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை மருத்துவ வசதி, செயற்கை முறை கருவூட்டல் வசதி, மானிய விலையில் அடர் தீவனம் மற்றும் தாது உப்பு கலவை, பசுந்தீவனம், தேவையான புல் கரணைகள் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
பால்வளத்துறை, கிராம அளவில் கிராம பொருளாதார மேம்பாடு மற்றும் மகளிர் சுய முன்னேற்றம் காண வழி வகை செய்கிறது. இவ்வாறு விற்பனை பெருக்கத்தால் பால் உற்பத்தியாளர்களின் வருமானம் பெருக தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொள்முதல் உயர்வு
சுமார் 12,585 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2018-19ல் நாளொன்றுக்கு சராசரியாக 29.46 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்ட பால், தற்போது கிராமப்புற 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பாலின் வைப்புத் திறன் கெடாமல் இருக்கும் பொருட்டு 356 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மூலம் ஒன்றியங்களில் பால் குளிரூட்டும் திறன் நாளொன்றுக்கு 15.94 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
பால் கையாளும் திறன்
குளிரூட்டும் நிலையம் – 34
தொகுப்பு பால் குளிர்விப்பான் – 356
பால் பண்ணைகள் – 23
இணைப்பு பாலம்
மேலும் ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டுவருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் சுமார் 120 கோடி ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் அவர்கள் அதிக வருமானம் ஈட்ட போதுமான வசதிகளை செய்து தருகிறது.பசுந்தீவனம் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. பசுந்தீவனத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 11 மாவட்ட ஒன்றியங்களில் சுமார் 65.32 ஏக்கர் பரப்பளவில் பசுந்தீவனம் பயிரிடப்பட்டு, தீவன புல் காரணைகள் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் கால்நடை தீவன மானியத்தில் பயனடைந்து வருகிறார்கள்.ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையிலிருந்து கால்நடை தீவனம் அனைத்து மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இணையம் மூலம் சேவைகள்
பால் உற்பத்தியாளர்களுக்கு வருமானம் பெருகிட வழிசெய்யும் நோக்கில் இணையம் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று இல்லம் தேடி வரும் கால்நடை மருத்துவ வசதி திட்டம். இத்திட்டத்தின் கீழ் நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு இல்லம் சென்று சிகிச்சை அளிக்கவும் மற்றும் அவசர கால சிகிச்சை அளிக்கவும் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு 830 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதிகள்
தேசிய மாட்டின இனவிருத்தி திட்டத்தின் கீழ் திரவ நைட்ரோஜென் குடுவைகள், உரை விந்து குடுவைகள், செயற்கை கருவூட்டல் கருவிகள் போன்ற இன வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதிகள், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் செயற்கை கருவூட்டல்கள் மேற்கொள்ள பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேற்கண்ட கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலினை சென்னை மற்றும் இதர நகரங்களுக்கு குளிருட்டப்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. மாதம் ஒன்றிற்கு சுமார் 17,50,000 கிலோமீட்டர் இயக்கப்பட்டு வருகின்றது.(உத்தேசமாக பூமியிலிருந்து சந்திரனுக்கு 3 தடவை சென்று வரும் தூரமாகும்)
ஆவின் வரலாற்றில்
மேலும் பால் விற்பனையை வெளிநாட்டில் துவங்கும் நோக்கில் ஆவின் வரலாற்றில் நவம்பர் 2017ல் சிங்கப்பூரிலும், ஆகஸ்ட் 2018ல் ஹாங்காங்கிலும், பிப்ரவரி 2019ல் கத்தாரிலும் ஒரு லிட்டர் பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை 4,08,072 லிட்டர் பால் மற்றும் 10219 லிட்டர் நெய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 238 லட்சம். மேலும் பல்வேறு நாடுகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்ய ஆவின் நிறுவனத்தால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினந்தோறும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
மேலும் கடந்த ஆண்டு சுமார் ரூ.5800 கோடி விற்பனை செய்து சாதனை செய்துள்ளது. ஆவின் நிறுவனம், மேலும் அதனை அதிகரிக்க தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தற்பொழுது மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 30 லட்சம் லிட்டர் பால் தினந்தோறும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி விற்பனை 12.50 லட்சம் லிட்டர் பால் மற்றும் பிற மாவட்டங்களில் 11 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விற்பனையில் புதிய உயரம்
2018 ஆண்டு சென்னையில் 12.64 லட்சம், 2019 ம் ஆண்டு இதர மாவட்டங்களில் 11.36 லட்சம் என மொத்தம் 24 லட்சம் என விற்பனை ஆகியுள்ளது.
மேற்கண்ட விற்பனையை புதிய உயரத்திற்கு எடுத்துச்செல்ல உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலர்களும் சிறப்பாக செயலாற்றியதன் பேரில் தற்போது ஆவின் புதிய உயரத்தை எட்டியுள்ளது.
தற்போது சென்னையில் ( 04.03.2020 ) 12.95 லட்சம்,
இதர மாவட்டங்களில் ( 25.02.2020) 11.37 லட்சம்,என மொத்தம் 24.32 லட்சம் என உயர்ந்துள்ளது.
அனைவருக்கும் நன்றி
இந்த புதிய உயரத்தை அடைய ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், அனைத்து மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்கள், ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் மாவட்ட கூட்டுறவு ஊழியர்களுக்கும், இணைய பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஏனைய ஒப்பந்த பணியாளர்கள், மொத்த பால் விற்பனையாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாகன ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் தமிழக அரசிற்கும் மற்றும் ஆவின் தனது நன்றியினை உரித்தாக்கி, வரும் காலங்களில், பால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்கும் கூடுதல் சேவைகள் செய்ய தயாராக உள்ளோம் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.