தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு ரத்தை ஸ்டாலின் கைகழுவி விடுவாரோ?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை,

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை. இன்னும் தேக்க நிலையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், எல்லா திட்டங்களையும் கைகழுவி விட்டது போல் இந்த நீட் தேர்வு ரத்தையும் ஸ்டாலின் கைகழுவி விடுவாரோ என்ற மிகப்பெரிய அச்சம் மாணவர்களிடம் மிகப்பெரிய அச்சம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு இந்தியா முழுவதும் முக்கிய பொருளாகி விட்டது. நீட் தேர்வினால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக போகிறது என்ற அச்சத்தோடு வேதனையோடு நாம் இருக்கிறோம். இந்த கல்வியாண்டில் நாடு முழுவதும் 497 நகரங்களில் உள்ள 3,570 மையங்களில் 17.78 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1.34 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 51.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த வரிசையை நாம் பார்க்கும்போது ஏற்கனவே 2020ம் கல்வி ஆண்டில் எடப்பாடியார் ஆட்சியில் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இந்தியாவில் நாம் 15-வது இடம் பிடித்தோம்.

ஆனால் இன்றைக்கு ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அளவில் 28-வது இடத்திற்கு சென்ற வேதனையான புள்ளி விபரத்தை நாம் பார்க்கிற போது இது வேதனையிலும், வேதனை அளிப்பதாக செய்தி அமைந்திருக்கிறது.

அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு பயிலும் வகையில், புரட்சித்தலைவி அம்மாவின் வாரிசு எடப்பாடியார், சமூக நீதிப்பாதையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த 2020ம் ஆண்டு உருவாக்கி கொடுத்து, அதே கல்வி ஆண்டில் 435 மாணவ மாணவிகளுக்கு அவரே மருத்துவ படிப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.

மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கினர். இதன்மூலம் கூடுதலாக 650 மாணவ, மாணவிகள் சேர்க்கை வாய்ப்பினை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். அதேபோல் எடப்பாடியார் கடந்த 2019ம் ஆண்டு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி அதை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தார்.

அதே நிலையில் தான் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியேற்று சவால் விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இதுவரை ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை. நீட் தேர்வு ரத்து இன்னும் தேக்க நிலையில் தான் இருக்கிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியாவதை தொடர்ந்து கண்ணீரோடு நாம் பார்க்கிறோம். இந்த ஆண்டும் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி வேதனையிலும் வேதனை அளிக்கிற செய்தியாக இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். முதல் கையெழுத்திடுவோம் என்று மிகப்பெரிய பொய்யை சொன்னார்கள் தி.மு.க.வினர். மாணவர்களின் எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது அந்த அறிவிப்பு.

இப்போதும் அவர்கள் சொல்லிக்கொண்டே கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலையில் தான் நீட் தேர்வு ரத்து குறித்து அவர்கள் நிலைப்பாடு இருக்கிறது. ரத்து செய்வோம், ரத்து செய்வோம் சொன்னார்கள்.

சொல்லி கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்ற நிலைப்பாட்டை பார்க்கிற போது, இதற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறோம் என்கிற அச்சம் ஏற்படுகிறது.

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்குவதற்கு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நாளோ அந்த நாளை எதிர்பார்த்து நமது தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, முதலமைச்சரும், அரசும் துரித நடவடிக்கை எடுத்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றிபெற்று நிறைவேற்றி நீட் தேர்வு ரத்து என்கிற செய்தி வருகிற வரை இந்த துயர செய்தி தொடர்ந்து கொண்டே இருப்பது நமக்கு வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.

நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப்படும் என்ற நல்ல செய்தியை மாணவர்களுக்கு தர துரித நடவடிக்கை எடுப்பாரா, இல்லை எப்போதும் போல் இப்போதும் எல்லா திட்டங்களையும் கை கழுவி விட்டது போல் இதையும் விடுவாரா என்று மாணவரிடத்தில் மிகப்பெரிய அச்சம், சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.