தமிழகம்

ஆரணியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக, குடியிருப்பு கட்டட பணி – முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 14.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 3 கோடியே 25 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

மக்களைத் தேடி அரசு எனும் சீரிய கோட்பாட்டின்படி, அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 18.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 2 கோடியே 75 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையரும், முதன்மைச் செயலாளருமான க.பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.