தற்போதைய செய்திகள்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து 280 பேர் பூரண நலம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

கோவை

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக கொரோனா தொற்றிலிருந்து 280 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக 280 நபர்கள் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தை முதல் 87 வயதான முதியவர் உள்ளிட்ட கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து அவர்களும் குணமடைந்துள்ளனார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், தேவையான அனைத்து விதமான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். முதலமைச்சரின் ஊக்குவிப்பு மற்றும் உற்சாகத்தின் காரணமாக அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள். வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா அறிகுறியுள்ளவர்கள் 14 நாட்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தனிமைப்படுத்தபடுகிறார்கள்.

அறிகுறி இல்லாமல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இவர்களால் கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவுகிறது. 20 சதவீதம் பேருக்கு தான் காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக இறக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களில் இறப்பு 70 சதவீதமாகவும், பெண்களில் இறப்பு விகிதம் 30 சதவீதமாகவும் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனிமனிதனின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது. கொரோனா வைரஸ் தொற்றை மேலும் பரவ விடாமல் தடுத்தல், நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாகும். இதுவரை சுகாதாரத்துறையில், மருத்துவர்கள் செவிலியர்கள் என மொத்தம் 9,646 பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து முதலமைச்சரால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட 2814 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணியில் சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளலாம். இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 43 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக சளி காய்ச்சல், தொண்டை வலி இருப்பவர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்றாக இருந்தால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

20,000 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் நிலையில் அவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயம் கொள்ள வேண்டாம், கவலை வேண்டாம், அச்சப்படவேண்டாம் அரசு இருக்கிறது. அதேசமயம், அலட்சியம், மற்றும் கவனக் குறைவு இருக்ககூடாது. அக்கறை இருக்க வேண்டும், அரசு அறிவிக்கும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.