தமிழகம் தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக வதந்திகளை பரப்பினால் சட்டப்பூர்வ நடவடிக்கை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

கோவை

கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக வதந்திகளை பரப்பினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டம், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

இந்தியாவிலேயே, அதிக நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடைபெற்று வரும் மாநிலம் தமிழ்நாடு ஆகும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலத்திலிருந்து 7 பிசிஆர் கருவிகள் மூலம் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் தொற்று கடந்த 19.03.2020 அன்று கண்டறியப்பட்டது. முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அதன்படி, இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகளும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 8 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 109 படுக்கை வசதிகள், பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 29 படுக்கை வசதிகள், அன்னூர் அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதிகள், தனியார் மருத்துவமனைகளில் 1246 படுக்கை வசதிகள் என மொத்தம் 2094 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

387 செயற்கை சுவாசக் கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா வைரஸ் தடுப்புக்காக பிரத்யேகமாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில், 149 மருத்துவர்கள், 112 செவிலியர்கள் மற்றும் 621 இதரப்பணியாளர்கள் என மொத்தம் 882 நபர்கள் மூன்று குழுக்களுக்காக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிசிக்சைகள் வழங்கப்பட்டு முழுவதும் குணமடைந்ததுடன், புதிய தொற்றுகள் ஏதும் உருவாகாத வகையில் கண்காணிப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக கோயம்புத்தூர் மாற்றம் பெற்றது.

இந்நிலையில் கடந்த 01.06.2020 அன்று வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரும்பியவர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மண்டலங்களுக்குள் பொதுப் போக்குவரத்திற்கு குறிப்பிட்ட விதிகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதோடு கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் அனுமதி பெற்று வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்றவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களிருந்து விமானங்கள் மூலம் வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சாலை மார்க்கமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு சோதனை சாவடிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளிவரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், அரசு அறிவிக்கும் தொடர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். மேலும் பொதுமக்களும், இப்பேரிடர் காலங்களில் அரசு அறிவிக்கும் அறிவுரைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக வதந்திகளை பரப்பினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) காளிதாசு, இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.