தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவிகள் விடுதி கட்டிட பணி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் உள்ள காரிமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான தங்கும் விடுதிக் கட்டடம் கட்டும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சார்ந்த மகளிர், உயர்கல்வி பெறுவதற்காக 13.09.2013 அன்று இக்கல்லூரியானது, புரட்சித்தலைவி அம்மா அவர்களால், காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தற்காலிகமாக காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெரகோடஅள்ளி கிராமத்தில் இக்கல்லூரிக்கென, 6.59 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, அவ்விடத்தில் ரூ. 7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில், கல்லூரிக்கான 14 வகுப்பறைகள், 3 ஆய்வகங்களுக்கான கட்டிடம் கட்டப்பட்டு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் 07.03.2017 அன்று திறந்து வைக்கப்பட்டு இக்கல்லூரி நன்முறையில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் இளங்கலையில், தமிழ், ஆங்கிலம், பி.காம் இளமறிவியலில், பி.எஸ்சி கணிதம், கணினிஅறிவியல். ஆகிய 5 பாடப்பிரிவுகளும் அதனைத் தொடர்ந்து 2017 -ம் ஆண்டு இளமறிவியலில் 5 பாடப்பிரிவுகளும்.முதுகலையில் 5 பாடப்பிரிவுகளும். ஆராய்ச்சி படிப்புகளில் 4 பாடப்பிரிவுகளும் அதே போன்று 2018 -ம் ஆண்டு இளங்கலையில், பி.சி.ஏ முது அறிவியலில் 2 பாடப்பிரிவுகளும் ஆராய்ச்சி படிப்பில் 3 பாடப்பிரிவுகளும் என மொத்தம் 25 பாடப்பிரிவுகளுடன் இக்கல்லூரியில் 1372 மாணவிகள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இக்கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு, 2017-2018ம் கல்வியாண்டில் 834 மாணவிகளுக்கு ரூ. 13,04,782 கல்வி உதவித்தொகையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2017-18ம் கல்வியாண்டில் 188 மாணவிகளுக்கு ரூ. 9,31,970 கல்வி உதவித்தொகையும் அம்மா அவர்களின் வழி தொடரும் அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உழவர் பாதுகாப்பு, கட்டுமான துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை போன்றவற்றில் இருந்தும், மாணவிகள் உதவித் தொகை பெற்று, பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நூற்றாண்டு விழா சார்பாக, இக்கல்லூரிக்கு 10 வகுப்பறைகள் கட்டுவதற்காக, ரூ. 1 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டது. இங்கு பயிலும் மாணவிகள் தங்களது கிராமங்களுக்கு செல்லமுடியாமல் இருப்பவர்களுக்கு இங்கே தங்கி படிப்பதற்காக மாணவிகள் தங்கும் விடுதி கட்ட தமிழக முதல்வர் ஆணை பிரப்பித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான தங்கும் விடுதிக் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவுபெற்று விரைவில் மாணவிகள் பயன்பட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, காரிமங்கலம் ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, மீனா, பெரியாம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.