தற்போதைய செய்திகள்

அன்பழகன் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பதிலடி

அம்பத்தூர்

அன்பழகன் மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க ஆவடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 65 நாட்களுக்கும் மேலாக ஆவடி பருத்திப்பட்டு, காமராஜர் நகர், ஜேபி எஸ்டேட், காந்திநகர், பட்டாபிராம், திருநின்றவூர், தண்டுறை, மிட்டனமல்லி, திருமுல்லைவாயில், சேக்காடு, மோரை, சோளம்பேடு, அயனம்பாக்கம், திருவேற்காடு ஏரிக்கரை, அம்பேத்கர் நகர், வேலப்பன்சாவடி, சுந்தர சோழபுரம் நூம்பல், மாதிரி வேடு பகுதிகளில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அரிசி பருப்பு காய்கறி தொகுப்பு மளிகை சாமான்கள் தொகுப்பு ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறார். அதனை பெற்றுக்கொண்ட மக்கள் கழக அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தவனம் மேட்டூர், பட்டாபிராம் கருணாகரச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற கூட்டம் நிறைவு பெற்று 70 நாட்கள் கடந்துள்ள நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் காரணம் என துரைமுருகன் குற்றம் சாட்டுவது ஏற்புடையது இல்லை. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அன்பழகனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்து தரப்பட்டது.

அவரின் மரணத்தை வைத்து தி.மு.க அரசியல் செய்ய வேண்டாம். கொரோனா வைரஸ் குறித்த மக்களிடம் பீதியை கிளப்பும் வகையில் எதிர்கட்சியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்கள் மக்களுக்கு பீதியை கிளப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். சென்னையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன், கோலடி மகேந்திரன், காந்தி, ஆர்.சி.டி.கமல், கேபிள்ஆனந்த், விஜயகுமார், வள்ளி சண்முகம், குப்பன், ஜெபசெல்வன், ஜெயபிரகாஷ், பேராசிரியர் டேவிட் ராஜன், சுந்தரம், சசிகலா, அப்துல்லா, பத்மாவதி, வீரகேசி, அந்தோணி, சேகர், ரமேஷ், வெங்கடேசன், மனோ பச்சையப்பன், சாகுல்அமீது, சீனிவாசன், அகமது, ராமசாமி, அனந்தலட்சுமி, தமிழ்ச்செல்வி, நந்தகோபால், செல்லத்தாய், கென்னடிராஜ், அருண்ராஜ், முருகன், கிருஷ்ணகுமார், அருள்முருகன், திலக், அருண்பிரசாத், மினிட் ஹேமந்த், வரதராஜன், ஆகாஷ், முரளி, பூபாலன், வரதராஜா, ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.