தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்துஇந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் வே.நாவேந்திரன், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) ஆனந்த்குமார், அமித்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. மந்தாகிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக நகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும், மேல்நிலைத் தொட்டிகள், குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை நகராட்சியில் 2 நாட்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் வீதம் ஒரு நாளைக்கு 17.50 மில்லியன் லிட்டர் தண்ணீர் (17.50 MLD) அதாவது ஒரு நபருக்கு 120 லிட்டர் தண்ணீர் (120 LPCD) விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆரணி நகராட்சியில் 3 நாட்களுக்கு ஒரு முறை 3 மணி நேரம் வீதம் ஒரு நாளைக்கு 3.86 மில்லியன் லிட்டர் தண்ணீர் (3.86 MLD) அதாவது ஒரு நபருக்கு 61 லிட்டர் தண்ணீர் (61 LPCD) திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 2 நாட்களுக்கு ஒரு முறை 1 மணி நேரம் வீதம் ஒரு நாளைக்கு 2.88 மில்லியன் லிட்டர் தண்ணீர் (2.88 MLD) அதாவது ஒரு நபருக்கு 68 லிட்டர் தண்ணீர் (68 LPCD) மற்றும் வந்தவாசி நகராட்சியில் 4 நாட்களுக்கு ஒரு முறை 1½ மணி நேரம் வீதம் ஒரு நாளைக்கு 1.97 மில்லியன் லிட்டர் தண்ணீர் (1.97 MLD) அதாவது ஒரு நபருக்கு 73 லிட்டர் தண்ணீர் (73 LPCD) விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.