சிறப்பு செய்திகள்

ரூ.441 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம்

சேலம் குரங்குசாவடி பகுதியில் ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தையும், லீபஜாரில் ரூபாய் 46 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாலங்கள் கட்ட தமிழக முதல்வராக புரட்சித்தலைவி அம்மா இருந்த காலத்திலேயே அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதல் பெற்று அடிக்கல் நாட்டினார்.

அதில் சில மேம்பாலங்கள் திறக்கப்பட்டு விட்டன. அதில் மிகப்பெரிய மேம்பாலமான ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 ரோடு – குரங்குசாவடி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் லீபஜார் – செவ்வாய்பேட்டையை இணைக்கும் மேம்பாலத்தையும், குரங்குசாவடி பகுதியில் இருந்து முதலமைச்சர் நேற்று காலை 10.30 மணிக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ரூ.286 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிறகு அந்த வழியே அரசு பேருந்து போக்குவரத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் புதிய பாலத்தில் பேருந்துகள் செல்லத் தொடங்கியது. பின்னர் புதிய பாலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.ராமன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், மாநிலங்களவை எம்.பி. சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.செம்மலை, ஏ.பி.சக்திவேல், ஆர்.எம்.சின்னதம்பி, மருதமுத்து, மனோன்மணி ,ராஜா, வெற்றிவேல், கு.சித்ரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் மாநகர செயலாளர் எம்.கே.செல்வராஜ், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாநகர பொருளாளர் பங்க் வெங்கடாஜலம்‘, பகுதி செயலாளர்கள் கே.ஆர்.எஸ்.சரவணன், யாதவமூர்த்தி, ஏகே.எஸ்.பாலு, முருகன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.