தற்போதைய செய்திகள்

கல்வி கட்டணம் குறித்து தனியார் கல்வி நிறுவனங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் – முதலமைச்சர் பேட்டி

சென்னை

கல்வி கட்டணம் குறித்து தனியார் கல்வி நிறுவனங்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: ஆன்லைன் கல்வி வழிமுறைகள் குறித்து மத்திய மனிதவள அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. குறிப்பாக, மழலைப் பள்ளிகளில் 30 நிமிடம் மட்டும் வகுப்பு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த 30 நிமிட வகுப்பிற்கு முழுக் கட்டணம் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்படுமா?

பதில்: இது ஒரு சோதனையான நேரம். இந்த நேரத்தில் குழந்தைகள் கல்வி கற்கவில்லையெனில் அதனை மறந்து விடுவார்கள். எனவே, ஆன்-லைன் மூலம் கல்வி கற்க வேண்டும். மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, நம் மாநிலம் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். கல்வி கட்டணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் கல்வி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

கேள்வி: மலைக் கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தப்படுமா?

பதில்: அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார வசதி செய்து தரவேண்டுமென்பது தான் அரசின் நோக்கம். மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்த மின் பாதை அமைப்பதில் பல இடர்பாடுகள் உள்ளது. குறிப்பாக, வனத் துறையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன, புலிகள் காப்பகம் உள்ளது, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது. எனவே, மலைக் கிராமங்களுக்கு முதற்கட்டமாக சோலார் மின் வசதி செய்து கொடுக்கின்றோம். மின்பாதை அமைத்து மின்சார வசதி செய்வதற்கும் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி: அங்கே பள்ளி ஆசிரியர்கள் …

பதில்: மலைவாழ் கிராமங்களில் உள்ள அனைத்துப் அரசுப் பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தப் பள்ளியிலும் ஆசிரியர் இல்லை என்ற நிலை கிடையாது.

கேள்வி: கோயம்புத்தூரிலிருந்து கர்நாடகாவிற்கு பைப் லைன் அமைத்தால் பாதிப்பு ஏற்படுமென்று விவசாயிகள் தெரிவித்துள்ளார்களே?

பதில்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் அந்தத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயிகள் கொடுக்கின்ற நிலங்களுக்கு 10 விழுக்காடு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டு வந்ததை, 100 விழுக்காடாக வழங்க அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசுக்குத் தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெறுவதற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பின்னரே நிலம் கையகப்படுத்தப்படும். அந்த நிலங்களில் பெரிய மரங்களை வைப்பதைத் தவிர்த்து பயிர் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.