தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58.68 லட்சம் நலத்திட்ட உதவி – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.58,68,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலுசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இவற்றின் மதிப்பு ரூபாய் 58 லட்சத்து 68 ஆயிரம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நன்கு செயல்படும் கைகளையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனம் ஆண்டு தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் கல்வி பயில்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள் ஆகியோருக்கு உதவிடும் வகையில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட தேர்வுக்குழு மூலம் நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து தனது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தையல் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும், 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக இன்றைய தினம் 30 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனமும் 5 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 70 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனமும் 55 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரமும் வழங்கப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பு 58 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீடு ஆகும்.

மேலும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் சக்கர வாகனம் பெற்ற பயனாளிகள் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக தங்களது பயணங்களை மேற்கொண்டு தங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டும். தையல் இயந்திரங்களை பெற்ற பயனாளிகள் தங்கள் தனிமனித வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டு தங்கள் குடும்பத்தையும் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் பயிற்சி ஷாகிதா பர்வீன், கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தெய்வ.பக்கிரி, கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன், மாவட்ட விவசாய பிரிவுச் செயலாளர் கே.காசிநாதன், கடலூர் நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் எஸ்.வி.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.