தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா நெல் சாகுபடி அதிகரிக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

திருவாரூர்

மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதால் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் அதம்பார் கிராமத்தில் திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வழக்கமான தேதியான ஜூன் 12ல் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று அணையை திறந்து வைத்துள்ளார். அதற்காக முதலமைச்சருக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தடையின்றி செல்லும் வகையில் ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 82 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து விட்டது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மனித சக்தி மூலம் ஊரகப்பகுதிகளில் உள்ள பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தமிழக அரசின் சிறந்த நீர் மேலாண்மை மற்றும் விவசாய உதவிகள் மூலம் கடந்த ஆண்டு நல்ல சாகுபடி மகசூல் ஏற்பட்டது. இதனால் அந்த ஆண்டு 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து வரலாற்றிலேயே இல்லாத கொள்முதல் அளவாகும். இந்த ஆண்டும் குறுவை மற்றும் சம்பா ஆகிய இருபோகம் விவசாயம் நடைபெற்று சாகுபடி அதிகரிக்கும்.

கொரோனா பாதிப்பினை தமிழகம் சிறந்த முறையில் எதிர்கொண்டு வருகிறது. வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் குறைவாக உள்ளது. தமிழக அரசின் சிறந்த சிகிச்சை முறையால் உலகிலேயே தமிழகத்தில் உயிரிழப்பு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. வல்லுனர் குழுவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.