தற்போதைய செய்திகள்

ரூ.2,564 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை, ஜூன் 13-

டெல்டா விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ. 2,564 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியை மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக மாணவர் அணி இணைச்செயலாளர் பி.குமார், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ் மற்றும் ஜோசப் தனுஸ்லால் பகுதி இளைஞரணி செயலாளர் எஸ்.டி.ஜெ.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தற்போது மேட்டூரில் இருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளார். இந்த டெல்டா பகுதியில் மட்டும் 667 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்களில் 29,889 மெட்ரிக் டன் அளவில் யூரியா டிஏபி உள்ளிட்ட உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவில் உள்ளது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் 95 லட்சம் விவசாயிகளுக்கு 51,499 கோடி அளவில் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் டெல்டா பகுதி 85% விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை செலுத்தி விட்டனர். தற்பொழுது இந்த குறுவை சாகுபடிக்காக ரூ. 2,564 கோடி அளவில் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்கடன் ரூ.9,552 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கு ரூ.11,000 கோடி அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது

இந்த ஒன்பது ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,585 கோடியளவில் தானிய ஈட்டு கடன் வழங்கப்பட்டது.
ஒன்றிணைவோம் வா திட்டத்தினை நிறைவேற்றுகிறோம் என கூறிய ஸ்டாலின் வீட்டிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி பாதுகாப்பாக இருந்து விட்டார். களப்பணி ஆற்றிய எம்.எல்.ஏ. அன்பழகன் தான் மறைந்து விட்டார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எந்த விஷயத்தை பாராட்ட வேண்டும். எந்த விஷயத்தை எதிர்க்க வேண்டும் என தெரியாமல் இருக்கிறார். ஏன் என்றால் அவருக்கு இருப்பது சொந்த மூளை அல்ல வாடகை மூளை அது தான் அப்படி பேசுகிறார்.

நடிகர் கமல் தன்னுடைய கட்சியில் இருக்கும் 100 நிர்வாகிகளை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே அரசை பற்றி குறை கூறி பேசுகிறார். அரசை பற்றி குறை கூறி பேசினால் தான் டி.வி.யில் அவரை காண்பிப்பார்கள். கமல் கூறுவதை போல அரசிடம் ஒரு சதவிகித குறை கூட இல்லை. அரசை குறை கூற கமலுக்கு யோக்கியதை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.