சிறப்பு செய்திகள்

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம்4,565 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது – முதலமைச்சர் தகவல்

சென்னை

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் இதுவரை 4,565 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தஞ்சை, புதுக்கோட்டை கல்லணை கால்வாயை சீரமைக்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூலமாக 2,298 கோடி ரூபாய்க்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்தவுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு அந்தப் பணியும் துவக்கப்படும். 2019-20ம் ஆண்டில் அனைத்துக் கால்வாய்களும் தூர்வாரப்பட்டதால், கடைமடைப் பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்கும் நீர் தங்குதடையின்றி சென்ற காரணத்தினால் தற்போது நல்ல விளைச்சலைப் பெற முடிந்தது.

2020-21ஆம் ஆண்டு குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்த ஆண்டு 67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 3,450 கி.மீ. கால்வாயை தூர்வாருகின்றோம். தற்போது 80 சத வீதப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன, எஞ்சியுள்ள 20 சத வீதப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும். இதற்காக 7 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அவர்களும் நேரடியாக சென்று தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். எனவே தான், தூர்வாரும் பணி துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

மேலும், இதற்காக 48 பொறியாளர்களை நியமித்து பணியை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம், குறித்த காலத்தில் பணி நிறைவடைய அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 2016-17ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தைப் நாங்கள் துவக்கினோம். முதலில், பரீட்சார்த்த முறையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 1,519 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு 1,513 ஏரிகள் தூர்வாரப்பட்டன. 6 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் பல்வேறு காரணங்களினால் நிலுவையில் உள்ளன. இந்தத் திட்டம் சிறப்பாக உள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து இதனை மேலும் விரிவுபடுத்த வைத்த கோரிக்கையை ஏற்று அம்மாவினுடைய அரசு 2017-18ம் ஆண்டு 331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்து, 1,523 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,470 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. 53 ஏரிகளில் இப்பணி பல்வேறு காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டு 503 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டு 1,849 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு 1,582 ஏரிகளில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது, எஞ்சியுள்ள 267 ஏரிகளில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 2020-21ம் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,387 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை குடிமராமத்துத் திட்டத்திற்காக 4 ஆண்டுகளில் 1,433 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 6,278 ஏரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 4,565 ஏரிகளில் பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஏரிகளில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.