சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும்- முதலமைச்சர் தகவல்

சென்னை

அதிக கல்வி கட்டணம் குறித்து புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வரப் பெறுகிறதே?

பதில்: அதுகுறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பள்ளியில் இவ்வளவு கட்டணம் கட்டச் சொல்கிறார்கள் என்று பெற்றோர்கள் புகார் கொடுத்தால் தான் அந்தப் புகாரின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக முதலமைச்சராகிய நானே தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால், அந்தப் பள்ளியின் மீது அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள்…?

பதில்: இது மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம். அதைவிட குறைவாகத்தான் நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம். மருத்துவர்கள் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு தான் நோய் பரிசோதனை செய்கிறார்கள். இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அப்படி தொற்று ஏற்பட்டால் அந்த மருத்துவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி மருத்துவர்கள் சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், மருத்துவ சங்க நிர்வாகிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதனடிப்படையில் தான், மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. நாம் அதைவிட குறைந்த கட்டணம் தான் நிர்ணயித்திருக்கிறோம்.

கேள்வி: தனியார் மருத்துவமனையை கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?

பதில்: எப்படி கையகப்படுத்துவீர்கள்? இது ஜனநாயக நாடு, சர்வாதிகார நாடு அல்ல. நீங்கள் எப்படி கேள்வி கேட்பதற்கு உரிமை இருக்கின்றதோ, அதுபோல அவர்கள் மருத்துவமனையை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. யாரும் தடுக்க முடியாது. சிகிச்சை செய்ய சொல்லலாம், சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.

கேள்வி: பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளதா?

பதில்: மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று இருக்கும்பொழுது இதை அறிவித்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்கு செல்வார்கள், பிரச்சினைகள் வரும். எனவே, தொற்று படிப்படியாக குறைக்கப்பட்ட பிறகு கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் ஆராய்ந்து அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.