சிறப்பு செய்திகள்

மீண்டும் ஊரடங்கு என்பது தவறான தகவல், வதந்தி பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை- முதலமைச்சர் எச்சரிக்கை

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வாட்ஸ்-ஆப்களில் ஒருதகவல் வருகிறதே?

பதில்: இது ஒரு தவறான செய்தி. இன்றைக்கு நான் வாட்ஸ்-ஆப்-ல்பார்த்தேன். என் பெயரில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஒருதவறான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை. அந்தத் தவறான செய்தி வெளியிட்டவர் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்கின்ற செய்தி தவறான செய்தி என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகையின் வாயிலாக நாட்டுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைக்கு சென்னையைப் பொறுத்தவரைக்கும், மக்கள் தொகை நிறைந்த பகுதி, 87 லட்சம் பேர் வசிக்கிறார்கள். பல தெருக்கள் 5 அடி, 6 அடி கொண்ட குறுகலான தெருக்களாக இருக்கிறது. அங்கு நெருக்கமான வீடுகள் உள்ளன, ஒரே வீட்டில் கிட்டத்தட்ட 8 பேர் வசிக்கிறார்கள். இதனால் தான் இந்தத் தொற்று எளிதாக பரவுகிறது. ஆகவே, இதைக் கட்டுப்படுத்துவதற்கு அம்மாவின் அரசால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். இதை கண்காணித்து ஒருங்கிணைப்பு செய்வதற்காக 2 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், 6 அமைச்சர் பெருமக்களை நியமித்திருக்கிறோம். எல்லா பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று அவர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள்.

மக்களிடத்தில் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு ஒரே மருந்து, ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளியிலே செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொருட்களை வாங்குகின்ற பொழுது இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியிலே செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெளியிலே சென்று வீடு திரும்பியவுடன் கை, கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு இருமல், தொண்டை வலி, சளி,காய்ச்சல் போன்ற ஏதாவது நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் கடைபிடித்தால் இந்தத் தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே இதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. வளர்ந்த நாடுகளில் கூட இதை நிலை தான். இந்தியாவில் சாதாரணமக்கள் வாழ்கின்ற பகுதி தமிழ்நாடு. அப்படிப்பட்ட பகுதியில் இவ்வளவு கட்டுப்பாடோடு இருப்பதே மிகப் பெரிய விஷயம். இருந்தாலும், அம்மாவினுடைய அரசு தொடர்ந்து ஊடகம் மற்றும் பத்திரிகையின் வாயிலாகவும், குறும்படங்கள் வாயிலாகவும் மக்கள் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்று விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கின்றோம்.

இந்த நோய் எப்படி தாக்குகின்றது, அப்படி தாக்கப்பட்டால் நீங்கள் எப்படி பாதிப்பீர்கள் போன்ற விவரங்களை ஊடகத்தின் வாயிலாக தெள்ளத்தெளிவாக தினந்தோறும் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மக்கள், கடைபிடிப்பதை புறக்கணிக்கிறார்கள். அதுதான் வேதனையாக இருக்கின்றது. நான்வரும்பொழுது கூட பார்த்தேன், பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. இந்தநோயின் வீரியத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை, நமக்கு வராது என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.

ஆனால் இந்த நோய் வந்து விட்டால் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று தத்ரூபமாக குறும்படம் எடுத்து நாம் ஊடகத்தின் வாயிலாக வெளியிட்டோம். அதை மக்களும் பார்த்தனர், ஆனால் அரசின் அறிவுரைகளை கடைபிடிப்பதில்லை. ஆகவே அருள் கூர்ந்து இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வேண்டுகோளாக வைக்கின்றேன்,

குறிப்பாக சென்னை நகர மக்களுக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன், இந்த கொரோனா வைரஸ் தடுப்புப் பணியை மேற்கொள்கின்ற அரசுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். அப்பொழுது தான் இந்த கொரோனா வைரஸ் நோயை தடுக்க முடியும். நம்முடைய மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்துகுணமடையச் செய்கிறார்கள்.

நம் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கித் தான் இந்த நோயை மருத்துவர்கள் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். இது ஒரு புதிய நோய், யாருக்கு வருகிறது என்று யாருக்குமே தெரியாது.

ஊடக மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வந்திருக்கிறது, நாட்டில், அமைச்சர்களுக்கு வந்திருக்கிறது, முதலமைச்சருக்கு வந்திருக்கிறது.பிரிட்டனில் பிரதமருக்கு வந்திருக்கிறது, ஒரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் இந்த நோய் வந்து இறந்திருக்கின்றார். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே, நான் கூறியவாறு அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்தால் இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.