கழகத்தின் வளர்ச்சியை முடக்க தி.மு.க. சதி -சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

நாமக்கல்
கழகத்தின் வளர்ச்சியை முடக்கும் நோக்கத்தில் தி.மு.க. சதி திட்டம் தீட்டி முன்னாள் அமைச்சர்கள், கழகத்திற்காக வேகமாக செயல்படுபவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசுபவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தம்பாளையம் பகுதியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ.வின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நேற்று நடத்திய சோதனைக்கிடையே, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், தாமோதரன் மற்றும் கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் நேரில் வந்தனர். முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியின் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வெளியே திரண்டு நின்றனர்.
அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
7 மாதத்தில் மக்களுக்காக எந்த திட்டங்களையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இதுவரை மழைவெள்ள பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை.
அ.இ.அ.தி.மு.க.வின் வளர்ச்சியை முடக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்கள், கட்சிக்காக வேகமாக செயல்படுபவர்கள், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசுபவர்கள் என முக்கிய புள்ளிகள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுகிறது.
இதுபோன்ற சோதனைகள் நிரந்தரமில்லை. இவற்றை சட்டரீதியாக சந்திப்போம். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில் தி.மு.க. அரசை யார் எதிர்த்து பேசினாலும் அவரை கைது செய்கின்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
பேட்டியின் போது நாமக்கல் நகர கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், கபிலர்மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொறியாளர் எஸ்.சேகர், பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.