தற்போதைய செய்திகள்

நகரத்துக்கு இணையாக கிராமப்பகுதிகளை மேம்படுத்த 3 ஊராட்சிகளில் பல்வேறு புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டிணம், நரசீபுரம் ஊராட்சிகளில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளையும் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணமான எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். கிராமப்பகுதிகளையும் நகரப்பகுதிகளுக்கு இணையாக மேம்பாடு அடையவும், சாலை, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து வகைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டுமென பல்வேறு முன்னோடித் திட்டங்களை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், அத்திகடவு அவினாசி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், சாலை, குடிநீர், சிறுபாலங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறைகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், தேவராயபுரம் ஊராட்சி பரமேஸ்வரன்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பார்க் மற்றும் அம்மா ஜிம், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ.8.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், புள்ளாக்கவுண்டன்புதூரில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பல்நோக்கு மையக்கட்டிடம், வெள்ளிமலைப்பட்டிணம், விராலியூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பார்க் மற்றும் அம்மா ஜிம் என மொத்தம் ரூ.88.70 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தேவராயபுரம் ஊராட்சியில் ரூ.23.10 லட்சம் மதிப்பில் புள்ளாக்கவுண்டன்புதூர் முதல் கொண்டையம்பாளையம் வரை சாலை புதுப்பிக்கும் பணிக்கும், ரூ.11.80 லட்சம் மதிப்பில் ஜல்லிப்பாளையம் சாலை முதல் வெள்ளருகம்பாளையம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணிக்கும், ரூ.18.40 லட்சம் மதிப்பில் வெள்ளருகம்பாளையம் முதல் விராலியூர் வரை சாலை புதுப்பிக்கும் பணிக்கும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணிக்கும், நரசீபுரம் ஊராட்சியில் ரூ.55.34 லட்சம் மதிப்பில் நரசீபுரம் முதல் வைதேகி நீர்வீழ்ச்சி சாலை வரை சாலையை புதுப்பிக்கும் பணிக்கும், என மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுளளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, ஜிகே.விஜயகுமார், டிஏ.சந்திரசேகர், கே.கே.கதிரவன், ராசு (எ) ஆறுச்சாமி, கருடா சுரேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டிசி.பிரதீப், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.மோகன்ராஜ், டி.கே.கார்த்திகா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.