தற்போதைய செய்திகள்

பாலாற்றில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதை தடுக்க ரூ.2 கோடியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் – அமைச்சர் நிலோபர்கபீல் தகவல்

வேலூர், ஜூன் 14-
பாலாற்றில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதை தடுக்க வாணியம்பாடி நகர மையப்பகுதியில் கிளை ஆற்றின் அருகில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்கள் விரைவில் அமைக்கபடும் என்று அமைச்சர் நிலோபர்கபீல் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

வாணியம்பாடி நகரத்தை தூய்மைப்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றும் திட்டபணி துவக்க விழா நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் நிலோபர்கபீல் பேசியதாவது:-

வாணியம்பாடி நகர மன்ற தலைவராக 15 ஆண்டு காலம் பணியாற்றிய போது தினமும் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வந்துள்ளேன். ஆனால் முழுமையாக தூய்மை செய்ய முடியவில்லை. சட்டமன்ற தேர்தலில் நிற்க நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து வாணியம்பாடி மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போதும் இந்த நகரத்தை தூய்மை செய்யும் நோக்கில் தான் செயல்பட்டு வருகிறேன். மேலும் வாணியம்பாடி நகரத்தின் மையப்பகுதியில் செல்லும் கிளை ஆற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மையான தண்ணீர் செல்வதை வாணியம்பாடி நகர மக்கள் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்.

அப்படி சென்று கொண்டிருந்த ஆற்றில் வாணியம்பாடி நகர மக்களாகிய நாம் ஒரு தவறை செய்து விட்டோம். கால்வாயில் செல்லும் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கிளை ஆற்றில் விட்டதால் ஆற்றின் தூய்மை கெட்டு விட்டது. ரூ.2 கோடி செலவில் கிளை ஆற்றின் பக்கத்தில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது கழிவுநீர் மற்றும் குப்பைகள் பாலாற்றில் கலக்காது. பிறகு பாலாறு தூய்மையாகி விடும், நிலத்தடி நீர் சுத்தமாக கிடைக்கும். வாணியம்பாடி நகர மக்கள் எங்கு ஆழ்துளைக்கிணறு போட்டாலும் தூய்மையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர்கபீல் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகர கழக செயலாளர் சதாசிவம், நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் அப்துல் சுபான், நகர கழக பொருளாளர் தன்ராஜ், சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ் குமார், நகராட்சி மேலாளர் ரவி, தூய்மைப்பணி ஆய்வாளர்கள் சீனிவாசன், அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.