தற்போதைய செய்திகள்

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார்.

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டம் 2019-20-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் சூடனூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி மயானத்திற்கு ரூ.23.81 லட்சம் மதிப்பீட்டிலும், பஞ்சப்பள்ளி முதல் கங்கபாளையம் முனியப்பன் கோயில் வரை ரூ.31.70 லட்சம் மதிப்பீட்டிலும், பேளாரஅள்ளி எருமாம்பட்டி மாரியம்மன் கோயில் முதல் வெப்பாலம்பட்டி வரை ரூ.15.66 லட்சம் மதிப்பீட்டிலும், மத்திய நிதிக்குழு மானியம் 2019-20-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் பஞ்சப்பள்ளி காடுசெட்டிப்பட்டி முதல் பஞ்சப்பள்ளி புல்அள்ளி கொட்டாய் வரை ரூ.40.11 லட்சம் மதிப்பீட்டிலும், மூலதன மானிய திட்டம் 2018-19-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் பேளாரஅள்ளி காவாப்பட்டி முதல் செல்லியம்மன் கோயில் வரை ரூ.43.60 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் 14 பணிகள் ரூ.2.85 கோடி மதிப்பிலும், காரிமங்கலம் வட்டத்தில் 8 பணிகள் ரூ.2.95 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டம் 2019-20-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.7.83 கோடி மதிப்பில் 118 பணிகள் 68.180 கி.மீ தொலைவிற்கு தார்சாலைகளும், – மூலதன மானிய திட்டம் 2018-19-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.11.52 கோடி மதிப்பில் 83 பணிகள் 80 சதவீதம் மானியத்தில் 47.46 கி.மீ தொலைவிற்கு தார்சாலைகளும், ரூ.9.03 கோடி மதிப்பில் 34 பணிகள் 20 சதவீத மானியத்தில் 40. 67 கி.மீ தொலைவிற்கு தார்சாலைகளும், மத்திய நிதிக்குழு மானியம் 2019-20-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.16.90 கோடி மதிப்பில் 49 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது இப்பணிகள் நிறைவு பெற்று விரைவில் பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், ஒன்றியக்குழுத் துணை தலைவர் செல்வராஜ்,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சரவணன், சங்கர், வீரமணி, கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கௌரி, மீனா, தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.