தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் தூவாரும் பணி விரைவில் முடிவடையும் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிவடையும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு தமிழகத்தில் மக்கள் விரும்புகிற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்ற முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் மக்களுக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து விட்டுள்ளார் முதலமைச்சர். கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2011ம் ஆண்டு அம்மா அவர்களால் ஜூன் 6ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் காணப்பட்டது. அந்த வருடம் மட்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் குறுவை, சம்பா இருபோகத்தையும் சேர்த்து 23 லட்சத்து 87 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் மட்டும் இதுவரை 24 லட்சம் மெ.டன் நெல் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. முதலமைச்சரின் தூர்வாரும் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 1244.06 கி.மீ தூர்வார திட்டமிடப்பட்டு, இதுவரை 1008.92 கி.மீ தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. மீதம் உள்ள 191.64 கி.மீ தூரம் மூன்று, நான்கு நாட்களில் நிறைவு பெறும்.

அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 82 ஆயிரத்து 252 மனித சக்திகள் மூலம் சி,டி வாய்க்கால்களில் 1953.37 கி.மீ தூரம் தூர்வாரப்பட்டுள்ளது. குளம், குட்டைகள் என 482 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 127 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் 355 குளங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் எம்.துரை கூடுதல் ஆட்சியர், ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தமிழ்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.