தற்போதைய செய்திகள்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் – அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

நாமக்கல்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பலசெயல்திறன் கொண்ட, இருதய துடிப்பை கண்காணிக்கும் 2 கருவிகள், தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தக் கூடிய நோயாளிகளின் தேவைக்கேற்ப படுக்கை உயரத்தை மாற்றியமைக்கக் கூடிய அதிநவீன 5 கட்டில்கள், நோயாளிகளை இடமாற்றம் செய்ய உதவியாக சக்கரத்துடன் கூடிய 2 படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை நோயாளிகளின் அறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் 2 அதிநவீன தள்ளுவண்டிகள், 2 சக்சன் அப்பாரட்டஸ் கருவிகள், 2 இன்ஃயூசன் பம்ப்கள்,

எலக்ட்ரானிக் முறையில் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் 7 கருவிகள், பாதரசம் அழுத்தமுறையில் இயங்கும் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் 6 கருவிகள், 100 படுக்கை விரிப்புகள், விரலில் மாட்டி உடலின் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பெரிய நபர்களுக்கான 7 கருவிகள், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் 1 கருவி, 1 செமி ஆட்டோ அனலைசர் கருவி உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான கருவிகளை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி வழங்கினார்.

மேலும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கரூர் வைஸ்யா வங்கியின் மூலம் வழங்கப்பட்ட ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டிலான ஜெனரேட்டரை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி இயக்கிவைத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட பிரேத பரிசோதனை கூடத்தை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) த.கா.சித்ரா, குமாரபாளையம் நகர கழகச் செயலாளரும், நகர வங்கி தலைவருமான எ.கே.நாகராஜ், வட்டாட்சியர் தங்கம், நகராட்சி ஆணையாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.