தற்போதைய செய்திகள்

வியாசர்பாடியில் கொரோனாவை தடுக்க நடமாடும் கிளினிக் – அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தனர்

சென்னை

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெரம்பூர் பகுதிக்கு உள்பட்ட வியாசர்பாடியில் கொரோனா தொற்றை ஒழிக்கும் பணியில் நோய் தொற்றை கண்டறிந்து தடுக்க புதிய நடமாடும் பரிசோதனை மருத்துவமனையை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மூர்த்திங்கர் நகர் குடிசை பகுதியில் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதனைத்தொடந்து வியாசர்பாடியில் நடைபெற்ற மூன்று மருத்துவ முகாம்களை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கே.பி.கார்த்திகேயன், மண்டல மருத்துவ அலுவலர் கயல்விழி, காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அனைவருக்கும் கபசுர குடிநீருடன் மூலிகை பொடி, முக கவசத்துடன் நோய் தடுப்பு விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.

அப்போது அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிம் பேசியதாவது:-

முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தனது ஆய்வு பணிகளில் வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் சிலருக்கு சாதாரண நோய் தொற்று தாக்கம் உள்ளதால் இங்குள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை முகாம் அமைத்து அதன் மூலம் நோய் தொற்று அறிகுறிகளை கண்டறிந்து அவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் சாதாரண நிலையில் நோய் தொற்றுடன் வென்டிலேட்டர் தேவைப்படாத நோயாளிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப சித்தா வைத்திய சிகிச்சை அளிக்க பெரம்பூர் பகுதி வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரியில் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது. மேலும் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியிலும் தொடங்கப்படும்.

மேலும் அரசின் கொரோனா வழி நெறிமுறைக்கான மருத்துவ வழிகாட்டுதலின்படி உடல் நல சோர்வு, மூச்சிரைப்பு நோய், இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட 9 வகையான நோய்களுடன் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக, சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர கைகளை சுத்தப்படுத்தி சமூக விதிகளை பின்பற்றி தமிழக அரசுக்கு ஆதரவு தரவேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டு மாநிலங்களில் முன்மாதிரி அரசாக விளங்குகிறது சீரிய முறையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளால் எதிர் கட்சிகள் தேவையில்லாமல் கூறிவரும் அவதூறுகளை மக்கள் நம்ப வேண்டாம் தமிழக அரசின் பணிகளை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. இன்று இப்பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் நல தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவ குழுவினருக்கு எனது இதயபூர்வமான நன்றியை தமிழக அரசின் சார்பில் இக்கணம் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதில் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ், நாம்கோ சேர்மன் வியாசை இளங்கோவன், டி.சரவணன், பி.ஜே.பாஸ்கர், து.சம்பத், கே.எச். பாபு, கொடுங்கை.கோபி, வியாசை எம் மகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.