தற்போதைய செய்திகள்

ஆரல்வாய்மொழியில் பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பில் கடன் உதவி – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பில், பல்வேறு கடனுதவிகளை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட, ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ரூ.50 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்படவுள்ள 5 கடைகளுடன் கூடிய வணிக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.18 கோடி மதிப்பில், பல்வேறு கடனுதவிகளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முழுவதும், கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொதுமக்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பொருளாதார முன்னேற்றம் அடைய, பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது, கொரோனா தொற்று காலமாக இருப்பதால், விவசாயிகள், பொதுமக்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில், அந்தந்த பகுதியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், பொருளாதார கடன்கள், விவசாய கடன்கள் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக, சுய உதவி குழுக்களை சார்ந்த உறுப்பினர்கள் மூலம் முககவசங்கள், கை கழுவும் திரவங்களை தயாரித்து, பொதுமக்களுக்கும், பல்வேறு விதமான அமைப்புகளுக்கும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் பணிபுரிந்துவரும் களப்பணியாளர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியின் மூலம், கிஸான் கிரெடிட் கடனாக ஒரு நபருக்கு ரூ.10 ஆயிரமும், மத்திய கால கடன்களாக 120 நபர்களுக்கு ரூ.80 லட்சமும், விவசாய கூட்டு பொறுப்புக்குழு கடனுதவியாக 100 நபர்களுக்கு ரூ.20 லட்சமும், 2 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 29 நபர்களுக்கு கடனுதவியாக ரூ.18 லட்சமும் ஆக மொத்தம் 230 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெறும் கடனுதவிகளை பெற்று, நீங்கள் செய்து வரும் தொழில்களில் கவனம் செலுத்தி, பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். கடனுதவிகள் பெறும் அனைவரும், நீங்கள் சார்ந்துள்ள கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்தார்.

இதன்மூலம் பயனடைந்த ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், கடனுதவிகள் பெற்ற மகளிர் சுய உதவி குழுவினர்; ஆகியோர் கொரோனா காலத்தில், தங்களுக்கு கடனுதவிகள் வழங்கிய, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சி.குருமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் டி.ஸ்டாலின், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் இ.சாந்தினி பகவதியப்பன் (தோவாளை), எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மா.பரமேஸ்வரன், சங்க செயலாளர் எக்ஸ்.சகாயம், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.