தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 7,099 மகளிர் குழுக்களுக்கு ரூ.7.8 கோடி கொரோனா சிறப்பு நிதியுதவி – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கொரோனா சிறப்புநிதி உதவி தொகுப்பின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் 7,099 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 7 கோடியே 8 லட்சத்து 25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்று –அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலகவங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, புதுச்சத்திரம் மற்றும் மோகனூர் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள் ஆகியோர்களின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கில் கொரோனா சிறப்புநிதி உதவித் தொகுப்பு முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கொரோனா சிறப்புநிதி உதவி தொகுப்பின் மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு 12 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.24 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்ததாவது:-

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க ஊரடங்கு மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் தொழில் முனைவோரின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் தொழில் முனைவோர், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் ஆகியோரின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கில் கொரோனா சிறப்புநிதி உதவித்தொகுப்பு திட்டம் முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வீதம் 696 நபர்களுக்கு 3.48 கோடி ரூபாய் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் கடனாக வழங்கப்படும். ஒருமுறை மூலதன நிதியாக உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 35 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 52.50 லட்சம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். ஒருமுறை மூலதன நிதியாக தொழில் குழு ஒன்றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 8 தொழில் குழுக்களுக்கு ரூபாய் 12 லட்சம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 40 குடும்பங்கள் பயன்பெறும்.

நீண்டகால கடனாக புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வீதம் 167 நபர்களுக்கு ரூ. 1.67 கோடி கிராம வறுமை ஒழிப்புசங்கங்கள் மூலம் கடனாக வழங்கப்படும். மூலதன நிதியாக ஓர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் வீதம் 2 கூட்டமைப்பு நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

நீண்டகால கடனாக மாற்றுதிறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக நபர் ஒருவருக்கு ரூ.20,000 வீதம் 696 நபர்களுக்கு ரூ. 1.08 கோடி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் கடனாக வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கொரோனா சிறப்புநிதி உதவி தொகுப்பின் மூலம் செப்டம்பர் மாதத்திற்குள் 7,099 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 7 கோடியே 8 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மாவட்ட செயல் அலுவலர் கோ.தாமோதரன், அரசு வழக்கறிஞர் தனசேகரன் உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.