தற்போதைய செய்திகள்

ரேஷன்கார்டு வைத்திருக்கும் சிறுவியாபாரிகள் 15.75 லட்சம் பேருக்கு ரூ.1958.36 கோடி சிறுவணிக கடன் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

ரேசன்கார்டு வைத்துள்ள இளநீர் கடை, டீ கடை, பெட்டிக்கடை, காய்கறி கடை என சிறு வியாபாரிகளுக்கு இதுவரை 15,75,319 நபர்களுக்கு ரூ.1,958.36 கோடி சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக ஸ்டான்லி அலுமினி டிரஸ்ட் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள், முகக்கவசங்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 334 தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்களை மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தலைமையில் ஆணையாளர் ச.விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணியினை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். கோயில்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது. எனவே பக்தர்களை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. என்றைக்கும் நாங்கள் இறை நம்பிக்கை உள்ளவர்கள். இன்று உள்ள சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஆலயங்கள் திறக்கப்படாமல் உள்ளது.

ஓரளவு கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு ஆலயங்கள் திறக்கப்படும். கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 உயர்மட்ட குழுக்கள், மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுடைய பொருளாதாரம் பாதிக்காத வகையில் கொரோனா தடுப்பு பணியிலும், பொருளாதார நடவடிக்கையிலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்கட்சித்தலைவர் பாராட்டு தெரிவிக்க கூட மனது இல்லை. முதலமைச்சர் மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து தந்து கொண்டு இருக்கிறார். அரசு பேருந்துகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக ஏற்றுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரக்கட்டணம் குறித்து குறிப்பிட்டு ஏதேனும் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார கட்டணத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் சமூக பொறுப்பு உண்டு.

எனவே விழிப்புணர்வுடன் சமூக இடைவெளி விட்டு நாம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சி என்றால் ஏதேனும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதேனும் சொல்லக்கூடாது. கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து உயர்மட்டக் குழுவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ரேசன்கார்டு வைத்துள்ள இளநீர் கடை, டீ கடை, பெட்டிக்கடை, காய்கறி கடை என சிறு வியாபாரிகளுக்கு இதுவரை 15,75,319 நபர்களுக்கு ரூ.1,958.36 கோடி சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் 01.04.2020 முதல் 30.04.2020 வரை 934 நபர்களுக்கு ரூ.2.88 கோடியும், மதுரையில் மட்டும் ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக்கடன் வழங்கப்படுவது இல்லை. கூட்டுறவு வங்கிகளான 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள், 874 கிளைகள் மூலம் சிறுவணிகக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தவறாக தகவல் பரப்பி உள்ளார்கள். முதலமைச்சர் உத்தரவின்படி சிறுவணிக்கடனை ரூ.50,000ம் உயர்த்தி வழங்கி உள்ளார்கள். தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் இங்கு சிறுவணிக்கடன் வழங்கப்படும். தகுதியானவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என நோட்டீஸ் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எங்கு சென்றாலும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.. இன்று ஸ்டான்லி அலுமினி டிரஸ்ட் சார்பில் 10,000 ஜிங்க் மாத்திரைகளும், 10,000 வைட்டமின் மாத்திரைகளும், களப்பணியாளர்களுக்கு 5000 முகக்கவசங்களும், 25 லிட்டர் கிருமி நாசினியும் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 334 தையல் கலைஞர்களுக்கு தலா ரூ.800 மதிப்புள்ள 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் அடங்கிய நிவாரண பொருட்களும் வழங்கப்படுகிறது. பசியில்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய பெருமை முதலமைச்சரையே சாரும்.

சுகாதாரத்துறையில் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது. அதேபோல் கொரோனாவை தடுப்பதில் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக மதுரை விளங்க வேண்டும். அதற்கு அனைவரும் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். பொதுவாகவே தமிழ்நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.