தற்போதைய செய்திகள்

சென்னையில் கொரோனாவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

சென்னை

சென்னையில் கொரோனா தொற்றை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் 6 அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலையில் மதுரை அல்மா சித்தா மருத்துவமனை வழங்கும் கூட்டு மருந்துகளான கபசுர குடிநீர் சூரணம், ஆடாதோடை மணப்பாகு, தாளிசாதி சூரண மாத்திரை ஆகியவற்றை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்க தன்னார்வலர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது.இது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. சவாலான நேரத்தில் பொதுப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்திலும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை. தேவையின்றி வெளியூர் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.