தற்போதைய செய்திகள்

அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம்- அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

சென்னை

அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்துதல் குறித்து பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலங்கள் எண். 8, 9 மற்றும் 10 ஆகியவற்றின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் நேற்று எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது பெருநகர் சென்னையில் பல பகுதிகளில் கொரோனா தொற்று நோய் பரவலாகி வருவதை கட்டுப்படுத்த முதலமைச்சரின் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கொரோனா நோய் அதிகமாக பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்தோ வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அத்தகைய நபர்கள் தனியாக மையங்களில் தங்கவைக்கப்படுவதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கொரோனா நோய் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பொது மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவும் அவ்வாறு வெளியில் வரும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் பொதுமக்களிடம் உரிய அறிவுரைகள் வழங்கி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணரும்படி அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தி வெகு விரைவில் கொரோனா நோய் இல்லாத மாநிலமாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் சீரிய நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு வழங்கி, அரசு கூறும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களை தடுப்பதற்காக மண்டல நிலையிலும் மற்றும் அடிப்படை நிலையிலும், மைக்ரோ திட்டம் தீட்டப்பட்ட மாநகராட்சியில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் குழுவாக அமைக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ்குமார் பன்சால், மாநகராட்சி ஆணையார் கோ.பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் அமைச்சர் மண்டலம் 9க்குட்பட்ட குயில் தோட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் முத்துப்பாண்டி அவென்யுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட வீடு ஆகிய இடங்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.