தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதி -முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயன் பேட்டி

அம்பத்தூர்,

எந்த ஒரு தேர்தலையும் கண்டும் அஞ்சாத இயக்கம் கழகம் என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் எம்.பி வா.மைத்ரேயன் கூறி உள்ளார்.
கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளிடம் இருந்து விண்ணப்ப படிவங்களை ஆவடி தொகுதிக்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தலைமையில் முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன்,

முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.கே.அசோக், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெ.ஜெயவர்தன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் டி.மாறன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்ட அவைத்தலைவர் திண்டு உத்தமராஜ், மாவட்ட கழக பொருளாளர் காமராஜ் நகர் ரவி, மாவட்ட துணை செயலாளர் முகப்பேர் பாலன், டப்லப் வேலன் உட்பட தேர்தல் ஆணையர்கள் உடனிருந்தனர்.


இதன்பின்னர் முன்னாள் எம்.பி. வா.மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட இந்த பகுதியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் கழக தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்ப படிவங்களை மிக எழுச்சியோடு பெற்று செல்வதை கண்கூடாக பார்த்தோம். எனவே இனி வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள கழகம் என்றுமே தயங்கியதும் கிடையாது, அஞ்சியதும் கிடையாது.

மேலும் இந்த ஏழு மாத தி.மு.க ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர் எனவே வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் வந்தாலும், ஜனவரி மாதம் வந்தாலும் சரி, எப்பொழுது வந்தாலும் அதனை எதிர்கொண்டு கழகம் வெற்றிபெறும். அதற்காகத்தான் என்னவோ ஆளும் தி.மு.க அரசு தேர்தலை தள்ளி வைத்து கொண்டிருக்கிறது என்ற தகவலும் எங்களுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறு முன்னாள் எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயன் கூறினார்.