சிறப்பு செய்திகள்

தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி அம்மாவின் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அம்மாவின் அரசு, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த்தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் மேற்பார்வையில், நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, வீடுவீடாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர். இதனால் நோய்த்தொற்று முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதேபோன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.