தற்போதைய செய்திகள்

வெளிமாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்

தருமபுரி

வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வந்தவர்களை 1077க்கு தகவல் தெரிவித்து அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வையுங்கள் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நிவாரண உதவிகளாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கடந்த 3 மாதத்துக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள லாரி டிரைவர்கள், ஜே.சி.பி.டிரைவர்கள், டிராவல்ஸ் டிரைவர்கள், கார், மினி லாரி டிரைவர்கள் என ஆயிரம் பேருக்கு கழகத்தின் சார்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

கொரோனா வைரஸானது தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று நோக்கத்தோடு இந்த மாதத்தோடு சேர்த்து கடந்த மூன்று மாதங்களாக நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒவ்வொருவருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஒட்டுமொத்தமாக இன்று தமிழக அரசு மூலமாக அம்மாவுடைய அரசானது வழங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நமது மாவட்டத்தில் நம்முடைய பகுதியில் இன்று கொரோனோ வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இயல்பான நிலைக்குத் மக்கள் திரும்ப வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் அனைத்து பணிகளுக்கும் செல்லலாம் என்று ஒரு மகத்தான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில் நாம் அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இன்று கொரோனா வைரஸால் பாதிப்பு என்பது உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தி உள்ளது. அது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதிலே தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் அனைவருக்கும் நன்றாக தெரியும். தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை ஏற்று நமது அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலக பெருமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நடந்து கொண்டதால் நமது மாவட்டத்தில் கொரோனா இல்லாமல் இருக்கிறது.

நமது கிராமத்தின் அருகில் கடமடையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் அவர் இங்கே வசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு வரவில்லை. வெளிநாட்டிலிருந்து நம்ம மாவட்டத்திற்கு வந்தவர்கள் கிட்டத்தட்ட 700 பேருக்கு மேல் இருப்பார்கள். அவர்களிடமும் கொரோனா இன்றைக்கு இல்லை. வெளி மாநிலத்தில் இருந்து ஆரம்ப காலகட்டத்தில் 9 ஆயிரத்து 785 பேர் வந்தார்கள்.

அவர்களிடமும் கொரோனா இல்லை, அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் இன்று சென்னையிலிருந்து நம்முடைய மாவட்டத்திற்கு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது. பெங்களூரில் இருந்து வந்தவர்களுக்கு உள்ளது. பம்பாயில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நமது மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உள்ளது. இதில் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அத்தனை பேருமே சென்னை, பெங்களூரு, அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள். வந்தவர்கள் அனைவரும் நேராக மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்ததால் கிராமப்பகுதிகள் கொரோனா பாதிக்காத வண்ணம் உள்ளது. வருகிற அத்தனை பேரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் நம் வீட்டிற்கு அருகிலோ அல்லது கிராமத்திற்கு அருகிலோ சென்னையிலிருந்து, வெளிமாநில, மாவட்டங்களிலிருந்து வந்தால் உடனடியாக அவர்களை நமது தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் சொல்லி அவர்கள் கேட்கவில்லை என்றால் 1077க்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.

அவர்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. தருமபுரி அருகே செட்டி கரையில் அமைந்துள்ள தற்காலிக மருத்துவமனையான அரசு பொறியியல் கல்லூரிக்கு அழைத்து சென்று முழு பரிசோதனை செய்து நோய் தொற்று உள்ளதா என்று கண்டறியவே சோதனை செய்யப்படுவார்கள். அவர்களில் யாரேனுக்கும் பாசிட்டிவ் ஆக இருந்தால் அவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அவ்வாறு நெகட்டிவ்வாக இருந்தால் வீட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆக நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை சுட்டிக் காட்டுகிறேன்.

ஏனென்றால் சென்னையிலே கொரோனா வைரஸ் தாக்கம் கூடுதலாவதற்கு காரணம், வெளியூரிலிருந்து வந்தவர்கள். ஆனால் சென்னையில் அப்படி இல்லை. நெருக்கடியாக இருப்பதினால் யாருக்கு இருக்கிறது, இல்லை என்று கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. கண்டுபிடிக்க இயலாத காரணத்தால் தற்பொழுது சென்னையில் அதிகமாக இருக்கிறது. ஆகவே நாம் கட்டுக்கோப்பாக இருப்போம்.

நமது பகுதியில் கட்டுப்படுத்துவோம் என்ற மனநிறைவோடு வெளிமாநிலம் மாவட்டத்தில் இருந்து யார் வந்தாலும் உடனடியாக 1077 தகவல் கொடுக்க வேண்டும். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழக அரசு பல்வேறு வகையில் மக்களுக்காக நல உதவிகள் செய்து கொண்டிருக்கிற வேளையில் கடந்த முறை நான் இங்கு நிவாரண பொருட்கள் வழங்க வருகை தந்த போது தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலர் மனு கொடுத்ததின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது .மேலும் 17 வாரியங்கள் மூலம் தமிழக அரசு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் இந்த நலவாரியங்களில் பதிவு செய்யவில்லை என்று கூறினார்கள். ஆகவே அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஆகவே இந்த தாக்கத்திலிருந்து பாதுகாப்பாய் இருந்து அரசுக்கு உதவியாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு நமது வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு வகையில் உதவி செய்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலமைச்சரின் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஏ.கோவிந்தசாமி, அரூர் வே.சம்பத்குமார் ,தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மாவட்ட கழக அவை தலைவரும், தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு ஒன்றியகுழு தலைவர் பாஞ்சாலை கோபால், ஒன்றிய கழக செயலாளர் கோபால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், நகர கழக செயலாளர் சங்கர், முன்னாள் நகர செயலாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, சுப்பிரமணி, மாது மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.