தற்போதைய செய்திகள்

மாணவர்களின் விடிவெள்ளியாக திகழும் முதல்வர், துணை முதல்வர் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புகழாரம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி வெள்ளக்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட வேலம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள 3000 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கினங்க திருப்பூர் மாவட்டம் கழகம் சார்பில் உடுமலைபேட்டை, தாராபுரம், மடத்துக்குளம், காங்கேயம், ஆகிய தொகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தினந்தோறும் ஒவ்வொரு கிராமமாக சென்று ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் காங்கேயம் தொகுதி வெள்ளக்கோவில் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம், செல்வநகர், சேனாபதி நகர், அத்தப்பம்பாளையம் புதூர், வேலம்பாளையம், ந.கரையூர், ஆலாம்பாளையம், காங்கயம் பாளையம் கிராமத்தை சேர்ந்த 2000 ஏழை குடும்பங்களுக்கு வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல்(எ)ஏ.எஸ்.ராமலிங்கம் ஏற்பாட்டில் தலா 10 கிலோ அரிசி பை, பருப்பு, காய்கறி, முககவசம் உள்ளிட்ட அத்தியாவசிய தொகுப்பினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

அப்போது பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர். அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் நகர், கருந்தேவிக்கவுண்டன் புதூர், வெள்ளியங்காட்டுவலசு, எஸ்.எம்.ஆர்.காலனி, மங்களப் பட்டி கிராமத்தை சேர்ந்த 1000 ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பை, பருப்பு, காய்கறி, முக கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல்(எ)ஏ.எஸ்.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடந்து கொண்டிருக்கும் கழக அரசு மாணவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளியாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திகழ்கிறார்கள். உலகத்தை ஆட்டிப்படைக்கும் இந்த கொடிய தொற்று நோயிலிருந்து வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நமது தமிழக முதலமைச்சர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்.

நாட்டின் வருங்கால தூண்கள் என மாணவ சமுதாயத்திற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மடிக்கணினி உடன் 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி கல்வியில் மாபெரும் சகாப்தத்தை உருவாக்கினார். இன்று அம்மாவின் வழியில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி தமிழகத்தில் சத்தமில்லாமல் பல்வேறு சாதனைகளை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் அம்மாவின் திட்டங்களை எல்லாம் மாணவ சமுதாயத்திற்கு அள்ள அள்ள குறையாது வழங்கும் அட்சய பாத்திரமாய் வழங்கி வரும் வேளையில் தற்பொழுது பத்தாம் வகுப்பு படிக்கும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நலனையும் பாதுகாப்பையும் பெற்றோர்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு மாணவர்களைத் தொற்று நோயிலிருந்து காக்கும் வகையில் தேர்வை ரத்து செய்து. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தாயுள்ளத்தோடு அறிவித்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் என்னுடைய சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.