தற்போதைய செய்திகள்

தமிழக அரசுக்கு எதிராக வீண் அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் – ஸ்டாலினுக்கு, அமைச்சர் க.பாண்டியராஜன் எச்சரிக்கை

சென்னை

தமிழக அரசுக்கு எதிராக வீண் அவதூறுகள் பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு, அமைச்சர் க.பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் பணியாக கொடுங்கையூர் பகுதியில் 34-வது வட்டம் குமரன் நகர், 35-வது வட்டம் முத்தமிழ் நகரில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை
அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நோய் தடுப்பு கையேடுகள், கபசுர மூலிகை பொடி மற்றும் முக கவசங்களை வழங்கினர்.
ஆய்வின்போது மண்டல மருத்துவ அலுவலர் கயல்விழி உடனிருந்தார்.

அப்போது அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அரசின் கொரோனா பணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தண்டையார்பேட்டையில் காலரா மருத்துவமனை, மொபைல் கிளீனிக், மருத்துவ முகாம்களில் நடைபெறும் தொடர் கொரோனா பரிசோதனைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் தற்போது உயர்ந்து வருகிறது. வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காக்க இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை தடுக்க நினைக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உருவாக்கிய ஒன்றிணைவோம் திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக வீண் அவதூறுகள் பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும். மக்களை திசை திருப்பும் அவரது முயற்சி வீணானது. அவரது குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கவில்லை.

பேரிடர் காலங்களில் அரசுடன் கைகோர்த்து செல்வது தான் அவரது ஆரோக்கிய அரசியலுக்கு உகந்தது . எதிர்கட்சிக்கான பண்பு எது என்பதை அவர் உணர வேண்டும். சமூக தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டும். அதற்கு அரசின் நெறிமுறைகளை சரியான வழியில் பின்பற்றினால் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு விடலாம். சமூகஇடைவெளியை பின்பற்றி முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணன், மல்லிகா, மற்றும் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ், வியாசை எம்.இளங்கோவன், டி.கனகராஜ், பி.ஜே.பாஸ்கர், ஏ.ஆனந்த், ஜெஸ்டின் பிரேம்குமார், எஸ்.ஏ.தாஸ், கே.எச்.பாபு ஆகியோர் உடனிரந்தனர்.