சிறப்பு செய்திகள்

ரூ.10 கோடியே 98 லட்சத்தில் நீதித்துறை அலுவலக கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச்செயலகத்தில், நிதித்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் – அன்னூர், பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் – கலசப்பாக்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 3 கோடியே 13 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள், சென்னை – நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்தில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் இரண்டு தளங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் தவிர்க்கவும், தற்போது மின் ஆளுமை (e-Governance) திட்டங்களான தானியங்கி பட்டியல் ஏற்புமுறை (ATBPS) மற்றும் மின் ஓய்வூதியம் (e-Pension) போன்ற திட்டங்களை செம்மையாக செயல்படுத்திடவும், விலைமதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும் வாடகை கட்டடங்களில் இயங்கும் சார் கருவூலங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் – அன்னூரில் 3,061 சதுர அடி கட்டட பரப்பளவில் 80 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில் 3,148 சதுர அடி கட்டட பரப்பளவில் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் 3,147 சதுர அடி கட்டட பரப்பளவில் 80 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரியில் 2,676 சதுர அடி கட்டட பரப்பளவில் 80 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

நிதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 10 அலுவலகங்களுக்கு சென்னை – நந்தனம், அம்மா வளாகத்தில், ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகக் கட்டடம் 36 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, முதலமைச்சரால் 4.3.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. அந்த ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாக கட்டடத்திற்கு 5-வது மற்றும் 6-வது தளங்களாக 50,787 சதுர அடி கட்டட பரப்பளவில் 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் இரண்டு தளங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்ட இந்த இரண்டு தளங்களில் சிறுசேமிப்புத் துறை, நிதித் துறை பயிற்சி மையம் மற்றும் விடுதி, மாம்பலம் – கிண்டி சார் கருவூலம், அரசு தகவல் மையம், பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS), அரசு மின் சந்தை (Government e Market) ஆகிய அலுவலகங்கள் செயல்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கருவூல கணக்குத் துறையின் ஆணையர் சி.சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.