தற்போதைய செய்திகள்

விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கடன் உதவி வழங்க வேண்டும் – கூட்டுறவு வங்கிகளுக்கு, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தல்

சென்னை

ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள 4 மாவட்டங்களில் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து வகையான கடன் உதவிகளையும் வழங்கும் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தி உள்ளார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தலைமைச் செயலகத்தில், நேற்று கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, வரும், 19.06.2020 முதல் 30.06.2020 வரை, பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் முழு ஊரடங்கு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவுத் துறையால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், இம் மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் தங்குதடையின்றி கிடைத்திட கூட்டுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 4 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 ரொக்கம் வரும் ஜூன் 22-ந்தேதி முதல் அவரவர் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்படும். மேலும், இம்மாவட்டங்களில் ஏற்கனவே செயல்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் அனைத்து பகுதி மக்களுக்கும் தொடர்ந்து வினியோகிக்க கூட்டுறவுத்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளைப் பொறுத்தவரை, பொது மக்களின் நலனை கருத்தில்கொண்டு இப்பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயவிலைக் கடைப் பணியாளர்களால் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று நேரடியாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அம்மா அவர்களின் அரசு, 2011 முதல் 31.05.2020 வரை 95,08,269 நபர்களுக்கு ரூ.51,499.06 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 1.04.2020 முதல் 07.06.2020 வரை 51,650 நபர்களுக்கு ரூ.392.82 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12.06.2020 அன்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் தகுதிவாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் தங்குதடையின்றி கே.சி.சி. கடன் வழங்கவும், தேவைப்படும் அளவிற்கு உரங்கள் இருப்பு வைக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது, கூட்டுறவு நிறுவனங்களில் 31,146 மெட்ரிக் டன் யூரியாவும், எம்.ஒ.பி. 14,412 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 27,861 மெ.டன்னும், டி.ஏ.பி. 22,125 மெ.டன்னும் என மொத்தம் 95,614 மெ.டன் உரம் கையிருப்பில் உள்ளது. இதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 16,601 மெ.டன் உரம் கையிருப்பில் உள்ளது.

சிறு வியாபாரிகளான பெட்டிக்கடை வைத்திருப்போர், பூ,பழம், காய்கறி மற்றும் இளநீர் போன்ற சிறு வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு விதிகளுக்குட்பட்டு அதிகபட்சமாக ரூ.50,000 வரை சிறுவணிகக்கடன் மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. 1.04.2020 முதல் 12.06.2020 வரை 10,068 நபர்களுக்கு ரூ.30.28 கோடி அளவிற்கு சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவணிக கடன் வழங்கப்படும் விவரத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் மேற்கூறிய வங்கிகளில் விளம்பரப் பலகைகள் வைக்கவும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசரக் கடன் தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக கொரோனா சிறப்புக் கடன் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ஒரு உறுப்பினருக்கு ரூ.5000 வரையிலும், ஒரு குழுவிற்கு ரூ. 1 லட்சம் வரையிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க அறிவுரை வழங்கப்பட்டு 01.04.2020 முதல் 10.06.2020 வரை 7887 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61.67 கோடி அளவிற்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.500 மதிப்புள்ள 19 மளிகைப் பொருட்கள் அடங்கியத் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 15.06.2020 வரை 6,76,773 மளிகைத் தொகுப்புகள் ரூ.33.83 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, ஏற்கனவே செயல்பட்டு வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மற்றும் 186 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் 15.06.2020 வரை 4,516.94 மெ.டன் காய்கறிகள் ரூ.11.95 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டிற்கான விதி 110-ன் கீழ் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் சுமார் ரூ.15.84 கோடி மதிப்பீட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இப்பணிகளை துவக்குவதற்காக பூமிபூஜை விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு சென்னை, சாலிகிராமத்தில் சுமார் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவது தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 19.06.2020 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இம்மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து வகையான கடன் வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
தணிக்கை முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், குறிப்பாக, சென்னை மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் தணிக்கையை நடப்பாண்டு வரை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக கூட்டுறவு நியாய விலைக்கடைகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வருகைதரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்திடவும், கிருமிநாசினி, சோப்பு, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் போன்றவைகள் தேவைப்படும் அளவிற்கு பணியாளர்களுக்கு வழங்குமாறும், கூட்டுறவுத்துறையின் அனைத்து அலுவலகங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி கிருமிநாசினி தெளிப்பான் போன்று அமைத்திடவும், நியாயவிலைக் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்குமிடமின்றி பணியாற்றிட வேண்டும் எனவும், புகார்கள் ஏதேனும் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடவும் அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், சிறப்புப்பணி அலுவலர் முனைவர் க.இராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், ஜி.ரவிகுமார், பா.பாலமுருகன், ஆர்.ஜி.சக்தி சரவணன், இரா.பிருந்தா, கோ.செந்தில்குமார், .சு.செந்தமிழ் செல்வி, எம்.முருகன், து.அமலதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.