சிறப்பு செய்திகள்

ரூ.2 கோடியே 99 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் மணிமண்டபம் – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரத்தில் 1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், 1 கோடியே 14 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் அல்லாள இளைய நாயகரின் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய குவிமாட மண்டபத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி, பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு உருவாக்கி, பராமரித்து வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 14.2.2019 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில்,
“பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்” என்றும், “கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு அன்னாருடைய பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும்” என்றும்,

“நீதிக்கட்சியின் வைரத் தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்” என்றும், “திரைப்படத் துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினை போற்றும் வகையிலும் தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்றும்,

“நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, அல்லாள இளைய நாயகருக்கு ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் (Dome) திருவுருவச் சிலை அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார்.

அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரத்தில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு 99 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு 43 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 42 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்படவுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபங்களுக்கு முதலமைச்சர் நேற்று காணொலிக்காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், தோவாளை கிராமத்தில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு 92 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம்,
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், வடகரையாத்தூர் கிராமம், ஜேடர்பாளையம் காவேரியாற்றின் இடக்கரையில் அல்லாள இளைய நாயகருக்கு 21 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள
முழு திருவுருவச்சிலையுடன் கூடிய குவிமாட மண்டபம் என மொத்தம் 2 கோடியே 99 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 5 மணிமண்டபங்களுக்கு முதலமைச்சர் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி
என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.