தமிழகம்

காவல்துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் – தாராபுரத்தில் 1 கோடியே 43 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம் மற்றும் திருப்பூர் மாநகரில் 59 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 11 கோடியே 59 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 17 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், 5 காவல்துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் – தாராபுரத்தில் 1 கோடியே 43 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம் மற்றும் திருப்பூர் மாநகரில் 59 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டடமானது, தரை மற்றும் இரண்டு தளங்களுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் குற்றம் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான ஆய்வாளர் அறைகள், தகவல் தொடர்பு மற்றும் ஆலோசனைக்கான தனி அறைகள், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பானது தரை மற்றும் முதல் தளத்துடன், நவீன சமையலறைக் கூடம், வாகன நிறுத்துமிடம், பாதுகாவலர் அறை, குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் – கோட்டார் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜீயபுரம் ஆகிய இடங்களில் 2 கோடியே 84 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 17 காவலர் குடியிருப்புகள், சென்னை மாவட்டம் – வளசரவாக்கம், விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல் மற்றும் இருக்கன்குடி ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள், சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – துறையூர் போக்குவரத்து காவல் நிலையம், என 3 கோடியே 66 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையக் கட்டடங்கள்,

கோயம்புத்தூர் மாவட்டம் – கருமத்தம்பட்டி, கடலூர் மாவட்டம் – நெய்வேலி, தேனி மாவட்டம் – தேனி ஆகிய இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டம் – விழுப்புரம் ஆகிய இடங்களில் க்யூ பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலகக் கட்டடங்கள், என 4 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல்துறை கட்டடங்கள், சென்னை மாவட்டம் – தண்டையார்பேட்டையில் 98 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் என மொத்தம், 13 கோடியே 62 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி.சைலேந்திர பாபு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா.மஞ்சுநாதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.