தற்போதைய செய்திகள்

கொடியாலம் அணையிலிருந்து 25 ஏரிகளுக்கு மின்விசை பம்பின் மூலம் நீரேற்றும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் – முதலமைச்சர் உறுதி

கிருஷ்ணகிரி

கொடியாலம் அணையிலிருந்து 25 ஏரிகளுக்கு மின்விசை பம்பின் மூலம் நீரேற்றும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

விவசாய பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கையான என்னேகோள்புதூர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அம்மாவின் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் மழைக்காலங்களில் வரும் நீரை வலது மற்றும் இடது கரை பிரதான கால்வாயிலிருந்து புதிய கால்வாய்கள் வெட்டி வறட்சியான பகுதிகளிலுள்ள ஏரிகளில் நீர் நிரப்புவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கான நிலம் எடுப்பதற்காக ரூ.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் எடுக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்பதற்காக, முதல்கட்டமாக ரூ.50 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குண்டான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, இந்தத் திட்டம் நிறைவேறுகின்ற பொழுது, சுமார் 3400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தத் திட்டத்தின் மூலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் பயன்பெறுவார்கள். அதேபோல, அலியானம் கால்வாய்த் திட்டத்திலும் சுமார் ரூ.12.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12 ஏரிகளில் இந்தத் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள ஏரிகளில் நிரப்புவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல பாரூர் ஏரி மற்றும் 33 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்திற்கும் நிலம் எடுக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நில எடுப்புப் பணி முடிந்தவுடன், இந்தப் பணி துவங்கப்பட்டு, மழைக்காலங்களில் உபரிநீரை ஏரிகளில் நிரப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடியாலம் அணையிலிருந்து 25 ஏரிகளுக்கு மின்விசை பம்பின் மூலம் நீரேற்றும் திட்டம் என்ற அருமையான திட்டத்தையும் நிறைவேற்றி அம்மாவின் அரசு இந்தப் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற அரசாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.