திருவண்ணாமலை

முதியோர் உதவிபெறும் 8488 பேருக்கு ஸ்மார்ட் கார்டு – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் தொகுதியில் முதியோர் உதவித்தொகை பெறும் 8488 பயனாளிகளுக்கு தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் ஆண்டுதோறும் அட்டையை புதுப்பித்து வந்த நிலையில் முதியோர் நலன் கருதியும், முறைகேடு செய்ய முடியாத அளவில் ஸ்மார்ட் கார்டு மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

இதன்படி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, போளூர் ஒன்றியங்களில் முதியோர் உதவித்தொகை பெறும் 8488 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து முதியவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதியவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக் கவசங்கள் அணிந்தும் ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் ராஜராஜேஸ்வரி, வெங்கடேசன், வட்ட விநியோக அலுவலர் ஆர்.பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஜவ்வாது மலை ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் வெள்ளையன், மாவட்ட கவுன்சிலர் தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.