தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம்

கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரதாபராமபுரம் ,சோழவித்யாபுரம் கிராமங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம், பிரதாபராமபுரம் மற்றும் சோழவித்யாபுரம் கிராமங்களில் விவசாயிகளுக்கான கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

`தமிழ்நாட்டில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பது பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி ஆகிய மூன்றினை அடிப்படையாக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் வெண்மைப்புரட்சி என்பது கிராமப்புறங்களில் பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். எக்காலத்திலும், கிராமப்புறங்களில் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகச்சிறந்த அம்சமாக பால் உற்பத்தி அமைந்துள்ளது.

நமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால், தஞ்சாவூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலில் உள்ள கொழுப்புச்சத்து அளவீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப பாலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து, 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்குரிய தொகை 10 தினங்களுக்குள் இ.சி.எஸ். மூலம் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இவ்வாறு, கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலினை விவசாயிகள் தாங்கள் விரும்பும் இடத்திலேயே சங்கம் அமைத்து, 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையோடு கொள்முதல் செய்து விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் பணியினை தஞ்சாவூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.வேதையன், மாவட்ட வளத் தலைவர் ஆர்.காந்தி, பிராதாபராமபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவராசு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.