தற்போதைய செய்திகள்

பல்வேறு கட்சிகளில் இருந்து 500பேர் விலகல் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருவண்ணாமலை

கலசப்பாக்கம் பகுதியில் திமுக, அ.ம.மு.க உள்ளிட்ட மாற்றுகட்சியினர் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட 500 பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலத்தூர், பில்லூர், மோட்டூர், பூண்டி ஆகிய பகுதிகளில் இருந்து தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியிலிருந்தும், புதியதாகவும் 500பேர் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட கழக செயலாளரும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாற்று கட்சியில் இருந்து கழகத்திற்கு வந்த அனைவருக்கும் வேட்டி, துண்டு மற்றும் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கிருமிநாசினிகள் பயன்படுத்தியும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் பில்லர் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகப்பிரியா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.