மதுரை

2 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – வி.வி.ராஜன்செல்லப்பா தகவல்

மதுரை

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல் படி 2 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்புகளை மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்ததாவது:-

200 நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த தொற்று நோயால் இதுவரை உலகம் முழுவதும் 82 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இதில் நான்கு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர். உலக அளவில் இந்த பாதிப்புகளை மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது தமிழகத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், இறந்தவர்களும் மிகவும் குறைவு தான். முதலமைச்சர் எடுத்துவரும் நடவடிக்கை எல்லாம் 29 மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் உள்ளது. இதுவரை 4,400 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணத்தொகுப்புகள் அரசின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கழகத்தின் சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் ஏழை-எளிய மக்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் இதுவரை 2 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி கழக அவைத்தலைவர் காசிராமன், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், வட்டக் கழக செயலாளர்கள் கருணா, கருத்தமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.