தற்போதைய செய்திகள்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 200 வார்டுகளிலும் உதவி பொறியாளர்கள் தலைமையில் குழு – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த 200 வார்டுகளிலும் உதவி பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுபடுத்துவது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னையில் ஏற்கனவே மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கீழ்மட்ட அளவில் பணிகளை மேற்கொள்ள 200 வார்டுகளிலும் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் தான் அனைத்து தெருக்களையும் நன்கறிந்தவர்கள், ஒவ்வொரு தெருவிலும் கொரோனா நோய்த்தொற்று நிலை என்ன அதனை பரவாமல் தடுப்பதற்கான வழி என்ன தெருக்களை எப்படி தூய்மையாக வைத்து கொள்வது என்பது குறித்து காலையிலும் மாலையிலும் ஆராய்ந்து செயல்படுவார்கள்.

சென்னையில் 200 வார்டுகளிலும் 480 இடங்களில் தற்போது மாநகராட்சி மூலம் பீவர் கிளினிக் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதன் மூலம் யார், யாருக்கு நீரிழிவு நோய் ரத்த அழுத்தம், கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இருக்கிறதா என்றெல்லாம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள்.காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு சிகிச்சையளிப்பார்கள். கொரோன அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

சென்னையில் களப்பணியில் சுமார் 38 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் 12 ஆயிரம் பேர், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். அதில் 8 லட்சம் முதியோருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னை மாநகர மக்களை பொறுத்தவரை எங்களுடைய எதிர்ப்பார்ப்பு ஒன்றே ஒன்று தான் முகக்கவசங்கள் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் கூடியவரை வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே சென்றால் வீட்டுக்கு சென்றவுடன் குளிக்க வேண்டும். இதை செய்தால் கொரோனா நோய்த்தொற்று நம்முடைய பக்கமே வரவே வராது. நாம் நோய்த்தொற்றில் இருந்து தப்பித்து விடலாம்.

மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி தான் சென்னையில் முதலமைச்சர் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். இது அரசு எடுத்துள்ளதொடர் நடவடிக்கைகளில் ஒன்று. கொரோனா நோய்த்தொற்று வீரியம் அடைந்திருக்கிறது. இதுவொரு சமூக பரவலாக மாறி விடக்கூடாது என்பதற்காக தான் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது நோய்த்தொற்றின் வீரியத்தை குறைக்க வேண்டும். அதற்காக தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இ்வ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.