சிறப்பு செய்திகள்

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை,டிச.16-

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்களை உரிய காலத்தில் நியாய விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடியா தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சி தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளை தாங்கும் திறன் ஆகியவற்றை சாம்பல் சத்து அளிக்கிறது. இதன் மூலம் வேர் வளர்ச்சி சீரடைந்து, தரம் உயர்ந்து, மகசூல் அதிகரித்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இந்த சாம்பல் சத்துக்கு விவசாயிகள் பொட்டாஷ் உரத்தினை பயன்படுத்துகின்றனர். இந்த பொட்டாஷ் உரத்திற்கு தற்போது டெல்டா மாவட்டங்களில் பற்றாக்குறை நிலவுவதாகவும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த நெற் பயிற்களை பாதுகாப்பதற்கு பொட்டாஷ் உரம் தேவைப்படுகின்ற நிலையில், வெளிச்சந்தையில் உரத்தின் விலை விஷம் போல் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளதாகவும், ஒரு மூட்டை பொட்டாஷ் உரத்திற்கு கூடுதலாக 700 ரூபாய் கொடுக்கக்கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்

சங்கங்களில் பொட்டாஷ் உரம். இருப்பில் இல்லையென்றும், முந்தைய விலையான, அதாவது ஒரு மூட்டை 1,041 ரூபாய்க்கு பொட்டாஷ் உரம் கிடைக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

தனியார் வியாபாரிகள் அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்து பொட்டாஷ் உரத்தின் விலையை உயர்த்துவதாகவும், நெற்பயிரின் பரப்பை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ள மாநில அரசு, அதற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் தஞ்சாவூர் காவேரி விவசாய பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும், அதைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருவதாகவும், இறக்குமதி செய்யப்படும் உரத்தின் மீதான மானியத்தை நீக்கியதுதான் தற்போதைய விலை உயர்விற்கு காரணம் என்றும், ஏற்கனவே இருப்பில் உள்ள உரத்தை பழைய விலைக்கே விற்பனை செய்யவேண்டும் என்று உர வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இதைக் கண்காணிக்க சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறும் முகவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பிலும் நேற்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருப்பில் உள்ள 18,600 மெட்ரிக் டன் பொட்டாஷ் 1,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரம் ஒரு மூட்டை 1,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், உண்மை நிலை வேறாக இருக்கிறது என்றும், இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை 700 ரூபாய் கூடுதலாக விலை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்
சங்கங்களில் இருப்பு இல்லை என்ற நிலைமை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும், உரிய காலத்தில் உரங்களை பயன்படுத்தினால்தான் அது உரிய பயனை விவசாயிகளுக்கு அளிக்கும் என்ற சூழ்நிலையில், நேற்று தான் தூத்துக்குடி துறைமுகத்திற்கு உரங்கள் வந்துள்ளன என்று கூறுவது காலம் தாழ்ந்த நடவடிக்கை என்றும், இந்த உரம் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று சேர மேலும் தாமதமாகும் என்றும், விவசாயிகள் புகார் தெரிவிக்க மாநில உர உதவி மையம் துவக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து இருப்பது கண்துடைப்பு என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து, வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களையும், இடுபொருட்களையும் உரிய காலத்தில் நியாயமான விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்பது தெளிவாகிறது. அரசின் மெத்தனப்போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலைமையையும், உரத்தின் இருப்பை முன்கூட்டியே அரசு உறுதி செய்யாததையும் கருத்தில் கொண்டு, பொட்டாஷ் உரம் பழைய விலைக்கே, அதாவது ஒரு மூட்டை 1,040 ரூபாய் என்ற விலைக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் உள்ளது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொட்டாஷ் உரத்தட்டுப்பாட்டினை நீக்கி, விவசாயிகளுக்கு முந்தைய விலையில், அதாவது ஒரு மூட்டை 1,040 ரூபாய் என்ற விலையில் பொட்டாஷ் உரம் தாராளமாக விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.