தற்போதைய செய்திகள்

2021 தேர்தலில் வெற்றி பெற்று கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

திருநெல்வேலி

2021 சட்டமன்ற தேர்தலிலுல் வெற்றி பெற்று கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த முகாமை கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேஷ் ராஜா தலைமை தாங்கினார்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட் வரவேற்றார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, கழக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் ஐ.எஸ்.இன்பதுறை எம்.எல்.ஏ. கழக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன், சீனிவாசன், கழக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்தியானந்த் உட்பட பலர் பேசினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

இந்திய வரலாற்றிலேயே பத்து சட்ட மன்ற தேர்தலில் ஏழு முறை வெற்றி பெற்றது கழகம் தான். வருகின்ற 2021 தேர்தலிலும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் அமையும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கைக்கு படிவத்தை மட்டும் கொடுத்து விட்டு போகமாட்டார். எந்த அணில் செயலாளராக இருந்தாலும் அந்த அணியை முதன்மைபடுத்தி கழகத்திற்கு வெற்றியை பெற்றுத் தருவார்.

தேர்தல் களம் என்றால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைத்தான் அழைப்பார். 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்த ஒரே ஆற்றல் மிக்க தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். 2016 சட்டமன்ற தேர்தலிலும் கழகம் வெற்றி பெறுவதற்கு அடித்தளம் போட்டது அம்மா. உழைத்தவர்களை தேடி அடையாளம் கண்டு பதவி வழங்கியவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.

நாட்டு மக்களை பாதுகாக்கின்ற ஆட்சி புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி. கொரோனா பேரிடர் மனித குலத்திற்கும் அச்சுறுத்தலையும் தந்து கொண்டு இருக்கிறது. கொரோனாவை ஒழிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்தவர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குளத்தூர் தொகுதியில் கூட ஆய்வு செய்யவில்லை. வீடியோ காணொளி மூலம் நாடகம் நடத்துகிறார். பேரவையில் இணைந்த நீங்கள் கடுமையாக உழைத்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.