திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலுக்கு அரசு சார்பில் யானை – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலுக்கு அரசு சார்பில் யானை வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு ஒன்றியம் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இளைஞர்கள் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத்கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட ஆவின் தலைவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். முன்னதாக ஒன்றிய கழக செயலாளர் பி.இராகவன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 9-ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.19.20 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கழக அரசு நிறைவேற்றி வருகிறது.

முதலமைச்சர் திருவண்ணாமலைக்கு வந்த பொழுது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் யானை இல்லாதது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு முதல்வர் அரசு சார்பில் யானை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும் கழக தொண்டர்களின் கோரிக்கைகளை தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும். மேலும் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போளூர் சட்டமன்ற தொகுதியை அதிமுகவே வென்றெடுக்கும் அது மட்டுமல்லாது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி திருவண்ணாமலை மாவட்டம், புரட்சித்தலைவி அம்மாவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க சபதம் ஏற்போம்.

இவ்வாறு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

அதனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட 49 ஊராட்சிகள் பெரணமல்லூர் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த 31 ஊராட்சிகள், சேத்துப்பட்டு பேரூராட்சி 18 வார்டுகள் என மொத்தம் 98 ஊராட்சி கழகங்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தனது சொந்த செலவில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.